சுடச்சுட

  
  university1

  ரிமம் பெறாத பல்கலைக்கழகம் செயல்பட்ட கட்டடம்.


  நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உரிமமின்றி செயல்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.
  குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு தொலைதூரப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கியுள்ளார்.
  இதில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பணம் செலுத்தி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் படித்துள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கியவர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர். 
  இந்நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு நாளிதழ் ஒன்றில் செல்வராஜ் விளம்பரம் செய்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, குத்தாலம் மேலசெட்டித்தெருவில் உள்ள ஒரு வீட்டில் உரிய உரிமம் பெறாமல் இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருவது தெரியவந்தது. 
  இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள மருத்துவ விழிப்புணர்வுப் பணி காவல் துணைக் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர் தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநரக அதிகாரிகள், சுகாதாரத் துறையின் நாகை இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் குத்தாலத்தில் செயல்பட்டு வந்த திறந்தவெளி மாற்றுமுறை பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அங்கிருந்த போலி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன.
  பின்னர், குத்தாலம் வட்டாட்சியர் சபீதாதேவி முன்னிலையில் மருத்துவ அதிகாரிகள் இப்பல்கலைக்கழகத்துக்கு சீல் வைத்தனர். 
  கைப்பற்றப்பட்ட போலி மருத்துவச் சான்றிதழ்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை இணை இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார். தலைமறைவான செல்வராஜை போலீஸார் தேடிவருகின்றனர்.

  நாகை மாவட்டம், குத்தாலத்தில் உரிமமின்றி செயல்பட்ட பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ விழிப்புணர்வுப் பணி காவல் துணைக் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர், சுகாதாரத் துறையின் நாகை இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai