சுடச்சுட

  

  சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை

  By DIN  |   Published on : 11th January 2019 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன.11) நடைபெற இருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
  தமிழ்நாடு சுகாதாரத் துறை ஊழியர்கள் நலச் சங்கச் செயலர் கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு: 
  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜன. 11) காலை 10.30 மணிக்கு அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற இருப்பதாக மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைத் துறை இயக்குநர் ஜனவரி 7-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டார். 
  கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் செவிலியர்கள், தற்போது பணிபுரியும் இடத்தில் சேவைச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவேண்டும். ஆனால், மிகக் குறுகிய கால அவகாசமே இருப்பதால் இச்சேவைச் சான்றிதழ் பெறமுடியாமல் செவிலியர்கள், இந்த இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  மேலும், எந்தெந்த இடங்களில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன உள்ளன என்பன உள்ளிட்ட எவ்வித தகவலும் இன்றி கலந்தாய்வு அறிவிப்பாணை அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர் கலந்தாய்வு குறித்து 2007-இல் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 
  ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. மேலும், இதுகுறித்த தகவல் முன்கூட்டியே செவிலியர்களுக்கு தெரிந்துள்ளதால் முறைகேடு நடைபெறவும் வாய்ப்புள்ளது. 
  எனவே, செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வை முழுவதும் விடியோ எடுக்கவேண்டும். ஜன. 7-இல் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைத் துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai