சுடச்சுட

  

  திமுக ஆட்சிக்கு ஆரம்பப் புள்ளியே ஊராட்சி சபைக் கூட்டம்: மு.க. ஸ்டாலின்

  By DIN  |   Published on : 11th January 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin

  திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட நவலூர்குட்டப்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசுகிறார் மு.க. ஸ்டாலின்.


  மத்திய, மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளியாகவும், திமுக ஆட்சிக்கு ஆரம்பப் புள்ளியாகவும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
  திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திய பிறகு, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்துக்குள்பட்ட சீகம்பட்டி ஊராட்சியிலும், மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட நவலூர்குட்டப்பட்டு ஊராட்சியிலும் வியாழக்கிழமை திமுக ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில், பொதுமக்களிடையே மு.க.ஸ்டாலின் பேசியது:
  தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து உரையாட வேண்டும் என்ற உணர்வு உள்ளது. நமக்கு நாமே திட்டத்தின்போது சுற்றி வந்த மாதிரி இப்போது வர முடியாது. இருப்பினும், ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு மக்கள் ஆர்வத்துடனும், எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் வருவதை காண முடிகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்ற நம்பிக்கையை காண முடிகிறது. 4 அல்லது 5 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. அதனுடன் சேர்ந்து சட்டப்பேரவை தேர்தல் வந்தால்தான் தமிழகம் உருப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோல, 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், திமுக ஆட்சிக்கு ஆரம்பப் புள்ளி வைக்கவும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
  கருணாநிதியின் சிகிச்சைகள் குறித்து முறையாக ஒவ்வொரு நிலையிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என தமிழக சட்டத்துறை அமைச்சரே குற்றம்சாட்டுகிறார். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை வசதிகள் கூட மக்களுக்கு கிடைப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல் அறிவிப்பு வெளியிடப்படும். திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் தேவையான அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். அனைவரும் நான் முதல்வராக வேண்டும் எனக் கூறுகையில், மகளிர் குழுவினர் தங்களுக்காக உள்ளாட்சித் துறை அமைச்சராக வேண்டும் என்கின்றனர். நான் முதல்வரானால் உள்ளாட்சித் துறையையும் சேர்த்து கவனிப்பேன் என்றார் ஸ்டாலின்.
  இக் கூட்டத்தில், சீகம்பட்டி, நவலூர் குட்டப்பட்டு கிராம மக்கள் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும், மணப்பாறை வறட்சி பகுதியாக உள்ளதால் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, விராலிமலை, கடவூர் ஒன்றியங்களை இணைத்து தனி மாவட்டமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
  இக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான கே.என். நேரு, எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
  ஆர்.கே. நகர் தந்த பாடம்: திருச்சியில் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திய ஸ்டாலின், வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறையாக இல்லாததாலேயே டெபாசிட் கூட பெற முடியாமல் தோற்க நேரிட்டது. எனவே, பூத் கமிட்டி உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். திமுக கட்சி வரலாற்றிலேயே பூத் கமிட்டி உறுப்பினர்களை தலைவர் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார்.

  மாஸ் லீடர் ஜெயலலிதா
  கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், ஜெயலலிதாவுடன் நமக்கு கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் அவர் மாஸ் லீடராக இருந்தார். மாஸ் மட்டுமில்லாது பெண் என்ற காரணத்தால் ஊழல், முறைகேடு செய்தாலும் ஜெயலலிதா என்பதற்காகவே மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது. அவரது மறைவுக்கு பிறகு தமிழகத்தில் மிகவும் மோசமான ஆட்சி நடைபெறுகிறது என்றார்.   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai