சுடச்சுட

  

  திருவள்ளூரில் நிகழ்ந்த விபத்தில் பலியான இளைஞரின் உடல் ஆந்திராவுக்குச் சென்ற பரிதாபம்

  By DIN  |   Published on : 11th January 2019 04:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  accident


  திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இறந்த இளைஞரின் சடலம் கிடைக்காததால் உறவினர்களும், பொதுமக்களும் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அத்திப்பட்டு கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாண்டூர் அருகே வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சுதாகரின் கால் துண்டாகி சாலையில் கிடந்தது. அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஒருபுறமும், தலைக்கவசம் மற்றொருபுறமும் கிடந்தன. 

  இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அக்கம்பக்கம் உள்ள முள்புதர்கள் ஆகிய இடங்களில் தேடியும் சுதாகரின் உடல் கிடைக்கவில்லை. இதனால், சுதாகர் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்ற விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை கண்டுபிடித்துத் தரக் கோரி, சுதாகரின் உறவினர்கள் மற்றும் பாண்டூர் கிராம மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

  இப்போராட்டம் காரணமாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி கல்லூரி, மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். 

  இந்நிலையில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சுதாகரின் உடல் அந்த வழியாகச் சென்ற வாகனம் மீது தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், அந்த வழியாகச் சென்ற லாரிகள் குறித்து சோதனைச் சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவுகளைப் பார்வையிட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். 

  இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த சுதாகரின் சடலம் விபத்தின்போது அந்த வழியாக ஆந்திர மாநிலம் கர்னூல் சென்ற லாரியில் கிடப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து 750 கி.மீ. தொலைவில் உள்ள சடலத்தை மீட்டுவர கர்னூல் பகுதிக்கு திருவள்ளூர் போலீஸார் விரைந்தனர்.

  திருவள்ளூரில் விபத்தில் இறந்தவரின் உடல் ஆந்திர மாநிலத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai