சுடச்சுட

  

  பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் தயாரிப்புக்கு கடனுதவி அளியுங்கள்: நபார்டு வங்கிக்கு முதல்வர் வேண்டுகோள்

  By DIN  |   Published on : 11th January 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ops-eps

  நபார்டு வங்கி சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் சிறந்த விவசாய தயாரிப்பு நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்வர் 


  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரித்த தொழில் நிறுவனங்கள் வேறு தொழில்கள் தொடங்க கடனுதவி அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  மாற்று வகைப் பொருள்களை அதிகளவில் தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்தார்.
  சென்னையில் நபார்டு வங்கியின் மாநில வங்கிக் கடன் குறித்த கருத்தரங்கில் வியாழக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
  தமிழகம் முதலிடம்: பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் அதிகளவில் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றது. அதுபோன்று, 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.1,008 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ஆம் நிதியாண்டில் இதுவரை 16 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் கூடுதலாக இந்த ஆண்டு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய கூட்டு பொறுப்புக் குழுக்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் நிலுவையின்றி வங்கியில் பெற்ற கடனை திரும்பி செலுத்தி வருவது விவசாயிகளின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.
  பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களிடையே மாற்றுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. 
  எனவே, இந்தப் பொருள்களை அதிகளவில் தயாரிக்கும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும்.
  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரித்த தொழில் நிறுவனங்கள், வேறு தொழில்கள் தொடங்குவதற்கும் கடனுதவி அளிக்க வேண்டும். நிகழாண்டில் தமிழகத்திலுள்ள 2 லட்சத்து 72 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வழங்கத் திட்டமிட்டுள்ளது. 
  இது சென்ற ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
  குறைந்த வட்டியில் கடன்: பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக நபார்டு வங்கி தமிழக அரசுக்கு தொடர்ந்து கடனுதவி அளித்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகளவில் குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்க நபார்டு வங்கி முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
  திட்டக் கையேடு: நபார்டு வங்கியின் மாநில வங்கிக் கடன் கருத்தரங்கில் 2019-2020-ஆம் ஆண்டில், தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 900 கோடி வங்கிக் கடன் வழங்குவதற்கான திட்டக் கையேட்டினை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். 
  இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai