இடஒதுக்கீடு: பாஜக உத்தரவின் பேரில் அதிமுக வெளிநடப்பு

பொதுப் பிரிவினரில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் மத்திய பாஜக அரசின்
இடஒதுக்கீடு: பாஜக உத்தரவின் பேரில் அதிமுக வெளிநடப்பு


பொதுப் பிரிவினரில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் மத்திய பாஜக அரசின் உத்தரவின் பேரில் அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவைத் திமுக குழு தலைவர் கனிமொழி குற்றம்சாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, மக்களை ஏமாற்றுவதற்காக இதைச் செய்துள்ளனர். 
பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எதிர்த்து வாக்களித்துள்ளது. 
இந்தச் சட்டத்தை எதிர்ப்பதைப் போல அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசினர். ஆனால், அது வெறும் நடிப்பு. அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களிக்காமல், பாஜகவின் உத்தரவின்பேரில் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
இதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தச் சட்டமசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமானம் 8 லட்சம் இருக்கலாம் என்று நிர்ணயித்து உள்ளனர். நாட்டில் மற்ற பிரிவில் 97 சதவீதம் பேர் குறைந்த வருமானம் உள்ளவர்கள்தான். அவர்களுக்கு மத்திய அரசு என்ன நியாயம் சொல்லப்போகிறது?
மத்திய அரசு ஹிந்துத்துவா, இந்துஸ்தான் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
பள்ளிகளில் ஹிந்தியைத் திணிக்க முயற்சி செய்து வருகிறது. முன்பு தமிழகத்தில் மட்டும்தான் ஹிந்தி திணிப்பை எதிர்த்தனர். இப்போது, எல்லா மாநிலங்களுமே எதிர்க்கின்றன என்றார் கனிமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com