புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நூறு நாள் வேலை 150 நாள்களாக நீட்டிப்பு: தென்னை, தோட்டக்கலைப் பயிர்களுக்கு முன்னுரிமை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நூறு நாள் வேலை 150 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நூறு நாள் வேலை 150 நாள்களாக நீட்டிப்பு: தென்னை, தோட்டக்கலைப் பயிர்களுக்கு முன்னுரிமை


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நூறு நாள் வேலை 150 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2018, நவ. 16- ஆம் தேதி வீசிய கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. திண்டுக்கல், திருச்சியில் சில வட்டங்களும், சிவகங்கை, கடலூர், தேனி, ராமநாதபுரம், கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கேயும் பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்ததுடன், லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளையும் இழந்தனர்.
இம்மாவட்டங்களில் 66.68 லட்சம் தென்னை மரங்கள் வேரோடும், பாதியாக முறிந்தும் சாய்ந்தன. தவிர, தோட்டக்கலைப் பயிர்களான மா, பலா, முந்திரி, எலுமிச்சை, காபி, வாழை உள்ளிட்ட 50 லட்சம் மரங்களும் சாய்ந்து விழுந்தன. தென்னை உள்ளிட்ட மரங்களும், பயிர்களும் சாய்ந்ததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தையும், விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பையும் இழந்தனர். 
12 மாவட்டங்களிலுள்ள கிராமப்புறப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைக் குறைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்கிற நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுப் பரிந்துரை செய்தது. இதற்கான அனுமதி மத்திய அரசிடமிருந்து கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு 2018 - 19 ஆம் நிதியாண்டில், நூறு நாள் வேலையை 150 நாள்களுக்கு நீட்டித்தது.
133 ஒன்றியங்களில்: இத்திட்டம் புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள 133 ஒன்றியங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணை ஜன. 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு, தொடர்புடைய மாவட்டங்களுக்குத் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறைத் தகவல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன.9) முதல் நூறு நாள் வேலையை 150 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலைப் பயிர்கள் நடுவதற்கும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி. மந்திராசலம் தெரிவித்தது:
இத்திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 100 நாள்கள் வேலை கொடுத்து முடிக்கப்பட்டிருந்தால், அக்குடும்பத்துக்கு மேலும் 50 நாள்களுக்கு வேலை கொடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் சாய்ந்த தென்னை மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், மீதமிருக்கும் வேர் பகுதி, நுனி பகுதி கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் குழி தோண்டி தென்னங்கன்றுகள் நடப்படும். இதற்கான தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதேபோல, விவசாயிகளின் நிலங்களில் சாய்ந்து கிடக்கும் மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
1.60 லட்சம் தென்னங்கன்றுகள்: இத்திட்டத்தில் குழி தோண்டுவதற்கு ரூ. 245.56, தென்னங்கன்று நடுவதற்கு ரூ. 16.56 என மொத்தம் ரூ. 262.12 வழங்கப்படுகிறது. மேலும், வேளாண்மைத் துறை மூலம் முதல் கட்டமாக 1.60 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
வழக்கம்போல, ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் தூர் வாரும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் இழந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு இந்த வேலை நீட்டிப்பு தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com