பொங்கல் பரிசுத் தொகை: தடை உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மனு

சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க, அனுமதி கோரியும், உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை


சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க, அனுமதி கோரியும், உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவை மாற்றியமைக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
தடை: தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்க தடை, விதித்து உத்தரவிட்டது. 
முறையீடு: இந்நிலையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான அதிமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலசுப்பிரமணியம் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
இதே போல் அரசு கூடுதல் வழக்குரைஞர் மனோகர் ஆஜராகி, சர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றார். வழக்குத் தொடர்ந்தால் வரிசைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 
மனுதாக்கல்: இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும் (பி.ஹெச்.ஹெச்), 35 கிலோ அரிசியுடன் அனைத்து பொருள்களும் வழங்கப்படும் (பி.ஹெச்.ஹெச்-ஏ.ஏ.ஒய்), அரிசியுடன் அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும் (என்.பி.ஹெச்.ஹெச்), அரிசியைத் தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் (என்.பி.ஹெச்.ஹெச்-எஸ்) மற்றும் எந்த பொருளும் வழங்கப்படாது (என்.பி.ஹெச்.ஹெச்-என்.சி) என்பது உள்ளிட்ட 5 வகையான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளன.
குடும்ப அட்டையை யாரும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தினர், நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பத்தினர், வசதிபடைத்த குடும்பத்தினர் என 3 வகையாக பிரித்து குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அரிசியைத் தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் (என்.பி.ஹெச்.ஹெச்-எஸ்) குடும்ப அட்டைதாரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். இவர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். இவர்களில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வரை, 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகையான ரூ.1,000-ஐ பெற்றுள்ளனர். 
இதே பிரிவில் இருந்து பரிசுத் தொகையைப் பெறாதவர்கள் வேதனையில் உள்ளனர். எனவே இவர்களுக்கு ரூ.1000 வழங்க அனுமதிக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை (ஜன.11) விசாரணைக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com