சுடச்சுட

  

  கோடநாடு கொலைகள், கொள்ளை விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் - வைகோ

  By DIN  |   Published on : 12th January 2019 08:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vaiko


  சென்னை: கோடநாடு கொலைகள் மற்றும் கொள்ளைகளுக்கு ஆட்களை ஏவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமையையும் தகுதியையும் இழந்து விட்டார். எனவே உடனடியாக பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெஹல்கா இணையப் புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், நேற்று புதுதில்லியில் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு மாளிகையில் கடந்த 2017, ஏப்ரல் 23 ஆம் தேதி, காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது காவல்துறையின் தரப்பில் “கோடநாடு மாளிகையில் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த சில உயர்ரக கடிகாரங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போனதாகவும்” கூறப்பட்டது.

  ஆனால், நேற்று தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் திடுக்கிடச் செய்வதாக உள்ளன.

  ஜெயலலிதா மறைந்த பின்னர் கோடநாடு மாளிகையில் காவலாளி ஓம்பகதூரைக் கட்டிப்போட்டு விட்டு கொள்ளையர் உள்ளே நுழைந்தனர். ஓம்பகதூர் மர்ம மரணம் அடைந்தார். பிறகு இந்தக் கொள்ளையில் தொடர்புடைய ஷயான் காரில் பயணம் செய்தபோது மர்மமான முறையில் ஏற்பட்ட விபத்தில் அவரது மனைவி வினுப்பிரியா, குழந்தை நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். ஷயான் மட்டும் காயங்களுடன் தப்பினார். அதன் பின்னர் கண்காணிப்புக் கேமரா ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமாக உயிரிழந்தார். இதன் பிறகு ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் கொல்லப்பட்டார். கோடநாடு மாளிகை கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்ம மரணத்தைத் தழுவியதும், ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் திட்டமிட்ட படுகொலைகள் என்பதை தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்டிருக்கும் ‘குறுவட்டு’ மூலம் அம்பலமாகி உள்ளது.

  கோடநாடு மாளிகை கொள்ளை நிகழ்வில் தொடர்புடைய ஷயான் என்பவரும் மேத்யூஸ் சாமுவேலுடன் தில்லியில் பத்திரிகை, ஊடகங்களைச் சந்தித்து கோடநாடு கொலைகள், கொள்ளைகள் குறித்து அதிர்ச்சியான தகவல்களைக் கூறி இருக்கிறார்.

  ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வாகன ஓட்டுநராக இருந்த கனகராஜ் தன்னை அணுகி, “கோடநாடு மாளிகையில் 2000 கோடி மதிப்புள்ள பணம் இருப்பதாகவும், முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை எடுக்க வேண்டும் என்றும்” கூறியதாக ஷயான் தெரிவித்துள்ளார். “இதற்காக கேரளாவிலிருந்து கொள்ளையர்களை அழைத்து வரும் பொறுப்பை ஓட்டுநர் கனகராஜ் தன்னிடம் ஒப்படைத்ததாகவும், இதையடுத்து தானும் கனகராஜ் உட்பட 10 பேரும் கொடநாடு மாளிகையில் நுழைந்து இரண்டு காவலாளிகளைக் கட்டிப் போட்டுவிட்டு உள்ளே இருந்த அறைக்குச் சென்று ஆவணங்களை எடுத்துக் கொண்டு இரு வாகனங்களில் தப்பி விட்டதாகவும், கட்டிப் போடப்பட்ட காவலாளி ஓம்பகதூர் மூச்சு திணறி இறந்து விட்டார்” என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  இந்த ஆவணங்களைக் கொண்டுவர உத்தரவிட்டது ஆட்சியில் இருக்கும் முக்கிய நபர்தான் என்று தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் திட்டவட்டமாக தனது புலனாய்வு அடிப்படையில் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

  ஜெயலலிதாவின் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கொள்ளை, இதில் தொடர்புடையோரின் மர்ம மரணங்களில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி சந்தேகத்தின் முட்கள் சாய்ந்துள்ளன.

  கோடநாடு மாளிகை கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான ஷயான், விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஓட்டுநர் கனகராஜ், தன்னை சென்னைக்கு வரவழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க வைத்ததாக வாக்குமுலம் அளித்திருப்பது முதல்வர் மீதே ‘கொலை’க் குற்றச்சாட்டு எழுந்து இருப்பதை உறுதி செய்கிறது.

  கோடநாடு கொலைகள் மற்றும் கொள்ளைகளுக்கு ஆட்களை ஏவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமையையும் தகுதியையும் இழந்து விட்டார். எனவே உடனடியாக பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.

  கோடநாடு கொலைகள், கொள்ளைகளுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தி கடுமையாக தண்டனை அளிக்க வேண்டும்.

  தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கும் கொடநாடு கொலைகள், கொள்ளையைக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, தமிழக மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் தப்பிவிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார் வைகோ.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai