சர்க்கரை அட்டைக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க அனுமதி

சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சர்க்கரை அட்டைக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க அனுமதி


சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தைப் பொருத்தவரை 5 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அதன்படி முன்னுரிமை உடையவர்-அரிசி பெறுபவர், முன்னுரிமை உடையவர் -அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி பெறுபவர், முன்னுரிமை அற்றவர்- அரிசி பெறுபவர், முன்னுரிமை அற்றவர்-சர்க்கரை மட்டும் பெறுபவர், எந்தப் பொருளும் வேண்டாதோர் ஆகியவை உள்ளன. இதில் சர்க்கரை மட்டும் பெறுபவர்கள் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். 
இவர்களில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வரை, 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகையான ரூ.1000-ஐ பெற்றுள்ளனர். இதே பிரிவில் இருந்து பரிசுத் தொகையைப் பெறாதவர்கள் வேதனையில் உள்ளனர். எனவே இவர்களுக்கு ரூ.1000 வழங்க அனுமதிக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், கூடுதல் அரசு வழக்குரைஞர் மனோகர் ஆகியோர் ஆஜராகி, சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான். இவர்கள் அரிசி வேண்டாம் எனக்கூறி சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்குகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டு விட்டது. எனவே எஞ்சியவர்களுக்கு இந்த தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த தொகை யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள நிலையில் இந்த 1000 ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தலாமே, இந்தத் தொகைக்காக நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்கிறீர்கள், ரூ.1000 கிடைக்காவிட்டால் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன் என்ற நிலையை உருவாக்கியது யார், ஓர் இலவச திட்டத்தை அறிவிக்கும் முன்பாக பயனாளிகள் யார் என்பதை முடிவு செய்து சரியாக திட்டமிட வேண்டும். மேலும் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஆந்திரம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த அரிசியை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கலாமே, முன்னாள் முதல்வர் அண்ணாவே ரூபாய்க்கு ஒருபடி அரிசி என்று தான் அறிவித்தார். இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் இலவசங்கள், இனிவரும் காலங்களில் இலவசங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுங்கள் என கருத்து தெரிவித்தனர். 
மேலும் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் 90 சதவீதம் பேருக்கு ரூ.1000 பரிசுத்தொகை விநியோகிக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக தடை பிறப்பித்தும் எந்தப் பயனும் இல்லை.
எனவே, எதிர்காலங்களில் இலவச அரிசி வழங்குவதையும் தவிர்க்க அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் அதில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு பணம் கொடுத்து விட்டதாகவும், எஞ்சியவர்களுக்கு பணம் செல்லவில்லை என்ற அரசின் கோரிக்கையை கருத்தில் கொள்ள முடியாது. ஆனால், அவர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான் என்ற அரசுத் தரப்பு வாதத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000-ஐ சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிக் கொள்ள உத்தரவிட்டு, அதற்கேற்ற வகையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாற்றியமைக்கப்படுவதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com