வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து விரைவில் முடிவு: அரசு மருத்துவர் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று, அரசு மருத்துவர் சங்கத்தினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று, அரசு மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருப்பதால், அது நிறைவடைந்த பிறகு போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசு மருத்துவர்களின் பிரதான கோரிக்கை. அதுதொடர்பாக ஆய்வு செய்ய அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டதாகவும், ஆனால் அக்குழு அளித்த பரிந்துரைகளைக்கூட அரசு ஏற்கவில்லை என்பதும் அவர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.
இந்தச் சூழலில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்கள் சார்பில் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டனர். இதனிடையே, அப்போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் வழக்கு விசாரணை நடைபெறும் வரை போராட்டங்களை நிறுத்தி வைப்பது என மருத்துவர் சங்கங்கள் முடிவு செய்தன. இந்நிலையில், வரும் 27 அல்லது 28-ஆம் தேதிக்குள் இந்த வழக்கின் விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அரசு மருத்துவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com