சுடச்சுட

  

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கோயில் காளைகள், தனிநபர்களுக்கு முதல் மரியாதை கிடையாது; பதிவு செய்த காளைகளுக்கு மட்டுமே அனுமதி

  By DIN  |   Published on : 13th January 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MDUAVNI

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கோயில் காளைகள், தனிநபர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படமாட்டாது. பதிவு செய்த காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
   பொங்கல் தினத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைத்து சமூகத்தினரையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
   இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
   ஜல்லிக்கட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராகவன், மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
   மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான வழக்குரைஞர்கள் சரவணன், திலீப்குமார், ஆனந்த், சந்திரசேகர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. குணாளன் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறை அலுவலர்கள், உயர் நீதிமன்றம் அமைத்துள்ள அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
   இதையடுத்து, ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
   சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்படும். இந்த குழு மட்டுமே நன்கொடை வசூல் செய்யும். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்குவதை ஒருங்கிணைப்புக் குழுதான் முடிவு செய்யும்.
   அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கோயில் காளைகள் மற்றும் தனிநபர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படமாட்டாது.
   ஜல்லிக்கட்டில் பதிவு செய்த காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு வரும் பார்வையாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.
   ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான ராகவன் கூறியது: அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
   நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி நடந்துவிடக் கூடாது என்பதற்காக, முழுமையாகக் கண்காணிக்கப்படும் என்றார்.
   பாதுகாப்பு ஏற்பாடுகள்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்புப் பணியில், மதுரை மாநகரக் காவல் துறையைச் சேர்ந்த 3 துணை ஆணையர்கள் தலைமையில், 780 போலீஸார் ஈடுபட உள்ளனர்.
   கூட்டத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் ஆட்சியர் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai