சுடச்சுட

  

  கொடநாடு விடியோ காட்சி: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை

  By DIN  |   Published on : 13th January 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விடியோ காட்சியை வெளியிட்டவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
   தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துடன், மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கியது. மேலும் அந்தக் கும்பல், அங்கிருந்த சில பொருள்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
   இச்சம்பவத்துக்கு பின்னர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார்.
   அதேவேளையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சயன், விபத்தில் சிக்கி பலத்தக் காயமடைந்தார். இதற்கிடையே கொôடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, அங்கிருந்த பொருள்களை திருடியது, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் இறந்தது தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ ஒரு விடியோ காட்சி தொகுப்பை புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
   இந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த விடியோ காட்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
   இதற்கிடையே இந்த விடியோ காட்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பதாகவும், விடியோ காட்சியை வெளியிட்ட மாத்யூ, அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன்,மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.
   அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மாத்யூ, சயன், மனோஜ் ஆகியோர் மீது அவதூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், அவர்கள் 3 பேரிடமும் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai