சுடச்சுட

  
  eps

  கொடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோ காட்சியில் தன்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது உண்மைக்கு மாறானது என முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். மேலும், அதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
   சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
   சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:-
   கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் என்னைத் தொடர்புபடுத்தி வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
   துளியும் உண்மையில்லை. இந்தச் செய்திகளை வெளியிட்டவர்கள், அதற்கு பின்புலமாக இருப்போர் ஆகியோர் உடனடியாகக் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
   இதுகுறித்து வெள்ளிக்கிழமையன்றே சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வர். கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் நடந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.
   இதில், கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் இதுவரை நீதிமன்றத்தில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கு வரும் பிப்ரவரி 2-இல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் என் மீது குற்றச்சாட்டு சொன்னவர்கள் குறித்தும் அவர்களுக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதும் விரைவில் கண்டறியப்படுவர்.
   எந்த ஆவணமும் கிடையாது: கட்சி நிர்வாகிகள் தொடர்பான ஆவணங்களை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதனை எடுப்பதற்காகவே அவர்கள் சென்றதாகவும் விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   மறைந்த ஜெயலலிதா எந்தவொரு நிர்வாகியிடமும் எந்த ஆவணத்தையும் பெற்றது கிடையாது. அவர் மீது இப்படிப்பட்ட களங்கத்தை கற்பித்தது கண்டிக்கத்தக்கது என்றார் முதல்வர் பழனிசாமி.
   கொடநாடு விடியோ தொடர்பாக அவதூறு வழக்குத் தொடரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், காவல் துறையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விசாரணையில் யார் யார் பின்புலமாக இருந்தார்கள் என்பது தெரியும்.
   நேரடியாக அரசியலில் எங்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் இப்படிப்பட்ட கோழைத்தனமான குறுக்கு வழியை கையாள்கிறார்கள்.
   குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க முடியாது: எனது தலைமையிலான அரசை குறுக்கு வழியில் கவிழ்க்க முடியாது. கொடநாடு விடியோ காட்சி விவகாரத்தில் அரசியலின் பின்புலம் உள்ளதாகவே கருதுகிறேன்.
   அதற்குத்தான் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு விசாரணையின் முடிவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும். இந்த விஷயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
   அவர் (மு.க.ஸ்டாலின்) முதல்வர் பதவியிலேயே குறிக்கோளாக இருந்து கொண்டிருக்கிறார். மக்களைச் சந்தித்து மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றால் நாங்கள் யாரும் தடுக்க மாட்டோம். ஆனால், குறுக்கு வழியைக் கையாண்டு அரசை எந்தக் காரணத்தைக் கொண்டும் கவிழ்க்க முடியாது என்றார் முதல்வர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai