சுடச்சுட

  

  கொடநாடு விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து புகார்: திமுக தலைவர் ஸ்டாலின் 

  By DIN  |   Published on : 13th January 2019 04:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin

   

  சென்னை: கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து திங்களன்று ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஒரு கும்பல் புகுந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தும், மற்றொரு காவலாளியைத் தாக்கி விட்டும் பங்களாவுக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பியது. இதில் முக்கியமான சில  ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. 

  இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே தனது கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்ட கூலிப்படைக்கு தலைவனாக செயல்பட்டதாக கூறப்படும் ஷயான் வெள்ளியன்று தில்லியில் பேட்டி அளித்துள்ளார். 

  அத்துடன் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான ஆவணப் படம் ஒன்றை வெளியிட்ட புலனாய்வு பத்திரிகையான தெகல்காவின்  முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் , இந்த விவகாரத்தில் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சம்பவத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து திங்களன்று ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

  இதுதொடர்பாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாயாலத்தில் ஸ்டாலின் ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போதுஅவர் கூறியதாவது:

  உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது திமுக தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பொய்யைச் சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்ததான் வழக்கு போட்டோம். ஆனால் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் தமிழக அரசுதான்  தேர்தலை நடத்தவில்லை.

  கொடநாட்டில் நடந்த மர்ம மரணம் மற்றும் சம்பவங்கள் தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுக்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். புகாரை நிரூபித்தால் பதவி விலகவும் தயார் என்று வெளிப்படையாகக் கூறாமல், அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோடுவதாக மிரட்டுகிறார்.

  எனவே முதல்வர் பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும். இந்த சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். 

  கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து திங்களன்று ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் திமுக கண்டிப்பாக நீதிமன்றத்தை நாடும். 

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai