சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

  By DIN  |   Published on : 13th January 2019 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anbumani3

   

  சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

  இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

  தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் தமிழர்களின் பாரம்பரியப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, மஞ்சு விரட்டு, எருதுவிடும் விழா,  சேவல் சண்டை, ரேக்ளா போட்டி ஆகியவற்றையும் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் நடத்தக்கூடாது என்றும், இதை மீறி எவரேனும் போட்டிகளை நடத்தினால் அவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். திருவிழாக்கள் என்ற  பெயரில் கூட இத்தகைய நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என்றும் ஆட்சியர் கடுமை காட்டியுள்ளார்.

  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் நடத்துவது என்பது  குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கு மாநில அரசின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிட்ட பிறகு தான் போட்டிகளை நடத்த முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை; அதனால் தான் போட்டிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களை ஏற்க முடியாது.

  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் தருமபுரி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை என்பது உண்மை தான். இது அறியாமல் நடத்தத் தவறா அல்லது திட்டமிட்டு இழைக்கப்படும் துரோகமா? என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டு குறித்த  அரசிதழில் தருமபுரி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை என்றால், முதலமைச்சரையோ அல்லது  தலைமைச் செயலாளரையோ அணுகி மாவட்டத்தின் பெயரைச் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து மக்களின் ஜல்லிக்கட்டு ஆசைக்கு முட்டுக்கட்டைப் போடுவதும், கோவில் திருவிழாக்களில் கூட இத்தகைய நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று கூறி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதும் சரியல்ல. இது எதிர்மறை விளைவுகளை அதிகமாக ஏற்படுத்தும்.

  ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், தமிழர்களின் வீர விளையாட்டை நடத்த உடனடியாக அனுமதி அளிக்க வலியுறுத்தியும் 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் எத்தகைய வலிமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன  என்பதை தமிழக மக்கள் அறிவர். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 25&க்கும் மேற்பட்ட இடங்களில்  இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டன.  சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக்கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன் மறியல் போராட்டம் நடத்தி நான் கைதானேன். இத்தகைய வரலாறு காணாத அழுத்தங்களுக்கு பணிந்து தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மத்திய அரசு அனுமதித்தது.

  இவ்வாறு போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் உரிமையை தருமபுரி மாவட்டத்தில் மட்டும் பயன்படுத்த தமிழக அரசு தடை போடுவதன் நோக்கம் புரியவில்லை. தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற இடங்களில் நடக்கும் அளவுக்கு  பிரமாண்டமாக தருமபுரி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. ஆனாலும்,  கோவில் திருவிழாக்களின் ஓர் அங்கமாகவும், உள்ளூர் அளவிலான சிறிய போட்டிகள் வடிவத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் போட்டிகள் நடத்தப்படும். அவற்றைத் தடை செய்வது திருவிழாக்களுக்கு உரிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பறித்து விடும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த  அரசு அனுமதி அளிக்க வேண்டும்

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai