சுடச்சுட

  

  பொங்கலுக்கு ஆறு நாள்கள் தொடர் விடுமுறை: களைகட்டியது கோயம்பேடு சந்தை

  By  சென்னை,  |   Published on : 13th January 2019 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SUGAR

  ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சனிக்கிழமை முதல் ஆறுநாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையில் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் விற்பனை களைகட்டியது.
   சென்னையில் தியாகராயநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் என மொத்தம் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்கறி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் கோயம்பேடு பிரதான சந்தையிலிருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன.
   இந்தநிலையில் ஆறு நாள் தொடர் விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் வாங்குவதற்காக கோயம்பேடு சந்தையில் சனிக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் 10 முதல் 30 சதவீதம் வரை விலை அதிகரித்து காணப்பட்டது.
   மொத்த விலையில் 20 கரும்புகள் கொண்ட கட்டு தரத்துக்கு ஏற்றவாறு ரூ.180 முதல் ரூ.400 வரையிலும், மஞ்சள் குலை ரூ.120 முதல் ரூ.150 வரையிலும், ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.30 முதல் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
   இதேபோன்று தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5-க்கு விற்கப்படுகிறது. சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.40 முதல் ரூ.90 வரை விற்பனையானது.
   ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000: பொங்கல் பண்டிகைக்கு பூஜை உள்ளிட்ட தேவைகளுக்காக அதிகளவில் பூக்கள் தேவைப்படுவதால்
   வழக்கமான நாள்களைக் காட்டிலும் 50 சதவீத அளவுக்கு கூடுதலாக பூக்கள் விற்பனைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. எனினும் அவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டது.
   மொத்த விலையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000 அரளி ரூ.250, ஜாதிமல்லி- ரூ.250, ரோஜா- ரூ.90, கனகாம்பரம் ரூ.650 ஆகிய விலையில் விற்பனை செய்யப்பட்டன. பொங்கலுக்கு ஓரிரு நாள்களே உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   காய்கறி- பழங்கள்: காய்கறிகளைப் பொருத்தவரை, மொச்சை, துவரை ஆகியவை கிலோ ரூ.50, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அவரை கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. பழங்களை பொருத்தவரை ஆப்பிள் கிலோ ரூ.120, மாதுளை ரூ.100, ஆரஞ்சு ரூ.70, சாத்துக்குடி ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
   சென்னையில் பிற பகுதிகளைக் காட்டிலும் அனைத்துப் பொருள்களும் ஒரே இடத்தில் மலிவாகக் கிடைக்கும் என்பதால் ஆண்டுதோறும் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக கோயம்பேட்டுக்கு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
   இந்த ஆண்டு சனிக்கிழமை முதல் பொங்கல் விடுமுறை தொடங்கியதாலும், நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டதாலும் பொங்கல் பொருள்கள் வாங்க அதிகளவிலான மக்கள் வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
   அலங்கரிக்கப்பட்ட பானைகள்: குயப்பேட்டை, வடபழனி, தியாகராயநகர், அடையாறு உள்பட சென்னையில் பல இடங்களில் பொங்கலுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பானைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
   இவை வண்ணம், தரம், அளவுக்கேற்றவாறு குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai