சுடச்சுட

  
  jasmine

  கடும் பனிப் பொழிவு காரணமாக மல்லிகைப் பூ வரத்து குறைந்ததால், மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 3500 ஐ சனிக்கிழமை தாண்டியது.
   ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, பவானிசாகர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்லி, முல்லைப் பூக்கள் உள்பட பூ விவசாய சாகுபடி செய்து வருகின்றனர். கோடைக்காலத்தில் பூக்கள் வரத்து தினந்தோறும் மொத்தமாக 15 டன்னாக உயரும். அதாவது ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 60 கிலோ வரை பூக்கள் கிடைக்கும்.
   தற்போது, கடும் பனிப் பொழிவால் மல்லிகைப் பூக்கள் சிறுத்தும், போதிய மழைப் பொழிவு இல்லாததாலும், பனிப்பொழிவு காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மல்லிகை உற்பத்தி ஏக்கர் ஒன்றுக்கு 60 கிலோவில் இருந்து 5 கிலோவாக சரிந்துவிட்டது. கடந்த சில நாள்களாக கடும் குளிர், பனிப் பொழிவால் ஏக்கருக்கு ஒரு கிலோ வரத்து கிடைப்பது அரிதாகிவிட்டது.
   சில நாள்களாகப் பூக்கள் வரத்து இல்லாத நிலையில் கிலோ ரூ. 1,500 க்கு விற்பனையான மல்லிகைப் பூக்களின் விலை ரூ. 3 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 3,500 க்கும், முல்லை ரூ. 1,140 க்கும், காக்கடா பூ ரூ. 1,150 க்கும், ஜாதிமுல்லை ரூ. 1,000 க்கும், கனகாம்பரம் ரூ. 520 க்கும், சம்பங்கி ரூ. 100 க்கும் விற்பனையானது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் விலை கிடைத்ததுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai