சுடச்சுட

  
  politicians

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடும் நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
   மு.க.ஸ்டாலின்: தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூவின் புலனாய்வு முயற்சியால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான மர்மங்கள் வெளியாகியுள்ளன. அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சிக்குரியதாக உள்ளன. 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி கொடநாடு பங்களா சர்ச்சைக்குரிய பகுதியாக மாறியது. அந்த பங்களாவின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்திலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களிலும் முதல்வர் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும்.
   வைகோ (மதிமுக): கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளைகளுக்கு ஆள்களை ஏவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மிக உரிமையையும் தகுதியையும் இழந்துவிட்டார். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி தமிழக மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும்.
   கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): கொடநாடு கொலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூலிப்படையின் தலைவன் சயன் கூறியுள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தார்மிக அடிப்படையில் உடனே பதவி விலக வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
   இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஜெயலலிதா மரணம் உள்பட பல மர்ம சம்பவங்களின் நிழல் முதல்வர் பழனிசாமி மீதும் விழுந்துள்ளது. இருப்பினும் எதுவுமே நடக்காதது போல் அவர் அமைதி காப்பது ஆரோக்கியமான செயல் அல்ல.
   டிடிவி தினகரன் (அமமுக): கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். பதவியில் இருப்பவரின் பெயரே சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள எந்த விசாரணை அமைப்பும் முறையான விசாரணையைப் பயமில்லாமல் மேற்கொள்ளுமா என்கிற கேள்வி எழுகிறது. அதனால், பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
   ஜவாஹிருல்லா (மமக): கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க வேண்டும். முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.
   உண்மையை அறிய வேண்டும்
   பி.எஸ்.ஞானதேசிகன் (தமாகா): ஒரு நாட்டையோ, மாநிலத்தையோ தலைமை தாங்குபவர்கள் மீது போகிற போக்கில் சேற்றை வாரி பூசுவது என அனுமதிக்கப்பட்டால், யாரும் எந்தப் பதவியிலும் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, ஒரு அரசின் ஸ்திரத் தன்மையை ஒரு நொடியில் தகர்க்க முடியும். இதில் எல்லாக் கட்சிகளும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, இதில் தொடர்புடையவர்களை விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai