"அண்ணலின் அடிச்சுவட்டில்' செல்லும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் சு. நடராஜன்

அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற காந்திய பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக மாற வேண்டும் என காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் கூறினார்.
"அண்ணலின் அடிச்சுவட்டில்' செல்லும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் சு. நடராஜன்

அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற காந்திய பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக மாற வேண்டும் என காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் கூறினார்.
 காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி இணைந்து நடத்திய அண்ணலின் அடிச்சுவட்டில் எனும் காந்திய பேருந்துப் பயணத் தொடக்க விழா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் பேசியதாவது:
 காந்தியடிகள் சுமார் 6 லட்சம் கிராமங்களை முன்னேற்ற 18 அம்ச நிர்மாணத் திட்டத்தை வகுத்திருந்தார். அதில், தூய்மையைப் பேணுதல், ஊட்டச்சத்து, பயிர்த் திட்டம், குளம், கண்மாய்களைப் பராமரித்தல் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
 குறிப்பாக, கிராம மக்களின் முன்னேற்றத்துக்கு தீண்டாமை, ஒற்றுமையின்மையே முக்கிய காரணம் எனக் கருதினார். எனவே அவற்றை சமூகத்திலிருந்து அகற்றப் பாடுபட்டார். இன்று அரசாங்கம் செயல்படுத்தும் சீர்மிகு நகர் திட்டத்தைப் போல, அன்றே அவர் சீர்மிகு கிராமத்தை உருவாக்க விரும்பினார். அதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்தியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 காந்தியடிகள் சாதி, மத, சமூக வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.
 இதற்கு முக்கியப் பணியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காந்தியின் கொள்கைகள், கருத்துகள் விதைக்கப்படவேண்டும். அதற்கு இத்தகைய காந்திய பேருந்துப் பயணத் திட்டம் மிகவும் அவசியமானதாகும். இதேபோன்ற திட்டத்தை வருங்காலத்தில் பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த உள்ளோம். மாணவர்களுக்கு காந்தியின் கருத்துகளை கொண்டு செல்ல இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
 காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் மா.பா. குருசாமி: காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில், காந்தியின் கருத்துகளை மாணவ சமுதாயத்தின் மத்தியில் பசுமரத்தாணி போல பதியச் செய்யும் வகையில் இந்த காந்தியப் பேருந்து பயணத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் இளம் சமுதாயத்தினரிடையே காந்தியின் சிந்தனைகள் வேரூன்ற வழிவகை ஏற்பட்டுள்ளது.
 இத்தகைய சீர்மிகுப் பணியில் தினமணி இணைந்து செயல்படுவது மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் செயலாகும். காந்தி தமிழகத்தில் சென்ற இடங்களுக்கு எல்லாம் செல்லும் மாணவர்கள், அங்குள்ள கருத்துகளை கவனித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
 காந்தி நினைவு நிதி தலைவர் க.மு. நடராஜன்: நான் பல்வேறு நாடுகளில் சென்று காந்தியைப் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். அப்போது அவர்கள் எல்லாம் மிகவும் ஆர்வமாகவும் உன்னிப்பாகவும் கவனிப்பார்கள். அவர்கள் காந்தியைப் பற்றி தெரிந்துகொள்வது மட்டுமின்றி, காந்தியோடு பழகிய நம்மோடு பழகினால் காந்தியின் அதிர்வலைகள் தங்களுக்கும் கிடைக்கும் என நம்புகின்றனர் என்றார்.
 நிகழ்ச்சியில், கனரா வங்கியின் மதுரை வட்ட துணைப் பொது மேலாளர் கலைச்செல்வன், காந்தி நினைவு அருங்காட்சியக உறுப்பினர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, மதுரை மிட்-டவுன் சுழற்சங்கத் தலைவர் மதன் உள்ளிட்டோரும் பேசினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com