அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் 848 பேருக்கு அனுமதிச் சீட்டு; பாலமேட்டுக்கு இன்று பதிவு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 848 பேருக்கு சனிக்கிழமை அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் 848 பேருக்கு அனுமதிச் சீட்டு; பாலமேட்டுக்கு இன்று பதிவு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 848 பேருக்கு சனிக்கிழமை அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. பாலமேட்டு ஜல்லிக்கட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.
 பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15) அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று (ஜனவரி 16) பாலமேட்டிலும், அதன் மறுநாள் (ஜனவரி 17) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
 இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும்போது பின்பற்ற வேண்டியவை தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு விதிகளை வகுத்துள்ளது.
 ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரரர்களுக்கு உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டு அதன் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. ஜனவரி 2 ஆம் தேதி முதல் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில், காளைகள் பரிசோதிக்கப்பட்டு தகுதி
 சான்று வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரம் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாடுபிடி வீரர்களின் உடல் தகுதி அடிப்படையில் அனுமதிச் சீட்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் சனிக்கிழமை
 பெற்றது. அலங்காநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் 876 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. 18 வயதில் இருந்து 40 வயதுக்குள்பட்ட 848 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.
 வாடிப்பட்டி வட்டாட்சியர் வி.பார்த்திபன் தலைமையில் வருவாய், சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 கடந்த ஆண்டு, மாடுபிடி வீரர்கள் ஏராளமானோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, அனுமதிச் சீட்டுக்கு வந்த மாடுபிடி வீரர்கள் தனித்தனி குழுவாக வரிசைப்படுத்தி மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
 பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) நடைபெறுகிறது. வீரர்களுக்கு பாலமேடு ஆரம்பப் பள்ளியிலும், காளை மாடுகளுக்கு பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜனவரி 14) நடைபெறும்.
 தற்போது அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் ஜல்லிக்கட்டு நாளன்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, போதைப் பொருள்கள் ஏதேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்த பிறகே களத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று வாடிப்பட்டி வட்டாட்சியர் வி.பார்த்திபன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com