எலியார்பத்தி சுங்கச்சாவடியில் 30 சதவீத கட்டணக் குறைப்பு: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச் சாவடியில், அனைத்து வாகனங்களுக்கும் 30 சதவீதம் கட்டணக் குறைப்பு வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க,

மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச் சாவடியில், அனைத்து வாகனங்களுக்கும் 30 சதவீதம் கட்டணக் குறைப்பு வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
 அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் தாக்கல் செய்த மனு விவரம்: மதுரை }தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அருப்புக்கோட்டை உள்ளது. இந்தச் சாலை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து நான்குவழிச் சாலையாக உள்ளது. இச்சாலையில் எலியார்பத்தி என்னும் இடத்தில் சுங்கச் சாவடி உள்ளது. ஆனால், இந்த தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் எந்த பராமரிப்புப் பணியும் செய்யப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், அடிக்கடி  விபத்துகளும் நிகழ்கின்றன. பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 எனவே, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மதுரை முதல் அருப்புக்கோட்டை வரை சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தியில் உள்ள சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த மனு கடந்த மாதம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையை முறையாகச் சீரமைக்கும் வரை  எலியார்பத்தி சுங்கச் சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் 30 சதவீதம் விலக்கு அளிக்க உத்தரவிட்டார்.
 அதையடுத்து, சுங்கச் சாவடி நிறுவனம் சார்பாக இந்தக் கட்டணக் குறைப்பை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள், மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச் சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் 30 சதவீதம் கட்டணக் குறைப்பை வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர். மேலும், சாலையைச் சீரமைப்பு செய்யும் வரை 30 சதவீதக் கட்டணக் குறைப்பு தொடரும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com