காந்தியம் ஒருநாளும் அழிந்துவிடாது: "தினமணி'ஆசிரியர் கி.வைத்தியநாதன்

காந்தியடிகள் பற்றி அரைகுறை புரிதலுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களால் காந்தியத்தை அழித்துவிட முடியாது என "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.

காந்தியடிகள் பற்றி அரைகுறை புரிதலுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களால் காந்தியத்தை அழித்துவிட முடியாது என "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
 காந்தி நினைவு அருங்காட்சியகம், "தினமணி' நாளிதழ் இணைந்து நடத்திய காந்தியடிகள் 150 - அண்ணலின் அடிச்சுவட்டில் காந்திய பேருந்துப் பயண தொடக்க விழா மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அமைதிப்பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் "தினமணி' ஆசிரியர் பங்கேற்று பேருந்துப் பயணத்தை தொடங்கி வைத்துப் பேசியது:
 மதுரை மண் சாதாரணமானது அல்ல. காந்தியடிகள் அரையாடைக்கு மாறியது நமது மதுரை மண்ணில்தான். இந்தியா என்பது கிராமப்புற, அடித்தட்டு, விவசாயிகளின் நாடு என்பதை அவர் புரிந்து கொண்டது நமது தமிழகத்தில்தான்.
 இன்றைக்கு இருப்பதுபோல சாலை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாமல் இருந்தும் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் அண்ணல் காந்தியடிகள் பயணித்திருக்கிறார். அவர் அளவுக்கு தமிழகம் முழுவதும் பயணித்த தேசியத் தலைவர்கள் யாரும் இன்று வரை இல்லை.
 இத்தகைய மகான் இந்தியாவில் பிறந்தது நாம் பெற்ற பேறு என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். காந்தியடிகள் என்கிற மிகப்பெரிய ஆளுமை மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்திருக்கும் செய்தியை இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.
 1947-க்கு முன்பு காந்தியடிகளுக்கு எதிராக அன்றைய காலனிய ஆட்சியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்றால், இந்தியா விடுதலை அடைந்த பிறகு காந்தியத்துக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. காந்தியத்தையும் காந்தியடிகளையும் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
 தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும், மக்களின் கவனத்தை ஈர்த்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள விழையும் இழி குணத்தாலும் சிலர் காந்தியடிகளையும் காந்தியத்தையும் விமர்சிக்க முற்பட்டிருக்கிறார்கள். பாவம், அவர்களுக்குத் தெரியாது. இன்று இவர்கள் அண்ணல் காந்தியை விமர்சிக்கும் அளவுக்கு, சுதந்திரம் பெற்றதே காந்தியடிகளின் அயராத, இவர்களுக்கு ஆதரவான பிரசாரத்தால்தான் என்பது.
 ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அடித்தட்டு மக்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதெல்லாம் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, ஆதிக்க சாதியினரால் சேரிகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் காந்திஜி ஹரிஜன சேவா சங்கத்தை தொடங்குவதற்கு முன்னால் இருந்த நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், உலகம் ஏன் காந்தியடிகளை மகாத்மா என்று போற்றுகிறது என்பதற்கான காரணம் புரியும்.
 உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களாகப் போற்றப்படும் லியோ டால்ஸ்டாய், பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரஸல், மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அண்ணல் காந்தியை வியந்துபார்த்து போற்றிப் பாராட்டுகிறார்கள் எனும்போது, காழ்ப்புணர்ச்சியுடன் புரிதல் இல்லாத சிலரது விமர்சனங்கள் காந்தியடிகளையோ, காந்தியத்தையோ எதுவும் செய்துவிட முடியாது.
 காந்தியடிகளின் அகிம்சையும் உண்ணாவிரதமும் சத்தியமும் இன்றைய அணு ஆயுத உலகத்திற்கு சாத்தியப்படுமா என்று எழுப்பப்படும் கேள்வி அர்த்தமில்லாதது. இன்றைய உலகமயச் சூழலுக்குத் தீர்வு காந்தியத்தில்தான் இருக்கிறது என்பது அதைப் புரிந்தவர்களுக்குத் தெரியும்.
 காந்தியடிகளின் உள்ளத்தில் உண்மை ஒளி இருந்தது. அதனால்தான் அவரது வாக்கிலும் ஒலி இருந்தது. மக்களை ஈர்க்கும் மிகப்பெரிய சக்தியாக காந்தியடிகள் திகழ்ந்ததற்கு அதுதான் காரணம். எந்தவிதமான ஊடகங்களும் இல்லாத காலத்தில் காந்தியடிகள் செல்லும் வழியெல்லாம் சாமானிய மக்கள் அவரை தரிசிக்கக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், காந்தியம் என்கிற காந்தத்தின் வலிமை எத்தகையது என்பதை உணரலாம்.
 "நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்' என்றார் சுவாமி விவேகானந்தர். "தினமணி'யும் மதுரை காந்தி அருங்காட்சியகமும் கட்டுரைப் போட்டி நடத்தி 50 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, காந்தியின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடமெல்லாம் பயணிக்கும் புனித யாத்திரைக்கு வழிகோலியிருக்கிறோம். காந்தியம் என்கிற அணையாச் சுடரை இந்த இளைஞர்கள் தூக்கிப் பிடித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com