நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாயை முதலீடாகப் பெற்று மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ தனது 6-ஆவது கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் நளினி சிதம்பரத்தை குற்றம் சாட்டப்பட்டவராக சிபிஐ சேர்த்துள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.
 நளினி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், சாரதா நிதி நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக ரூ.1.40 கோடி பெற்றது தொடர்பாக நளினி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முந்தைய குற்றப்பத்திரிகைகளில் நளினி சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்டவராகவோ, சாட்சியாகவோ சேர்க்கப்படாத நிலையில் அவரை கைது செய்யக்கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதால் அந்த வழக்கிலும் முன் ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார்.
 அதற்குப் பதிலளித்த அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் ஹேமா, இதே வழக்கில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் தான் கைது செய்யப்படுவோம் என நளினி சிதம்பரம் அஞ்சத் தேவையில்லை என்றும், அமலாக்கப்பிரிவு விளக்கத்தைப் பெற்று தெரிவிப்பதற்காக வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு தள்ளிவைக்க கோரினார்.
 இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், நளினி சிதம்பரத்துக்கு 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இரண்டு வாரத்திற்குள் எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் சரணடைந்து பிணைத் தொகையை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர் கொல்கத்தா நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com