பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டம்: விடுபட்டோருக்கு இன்றும் நாளையும் கிடைக்கும்

தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறாமல் விடுபட்டோருக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டம்: விடுபட்டோருக்கு இன்றும் நாளையும் கிடைக்கும்

தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறாமல் விடுபட்டோருக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதால், விடுபட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி சர்க்கரை மற்றும் எந்தப் பொருளும் வேண்டாத அட்டை வைத்திருப்போர் வரை அனைவருக்கும் ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
 நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடந்த சில நாள்களாக ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பல நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.
 இந்த நிலையில், சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் இருப்பதாகவும் அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சர்க்கரை பெறும் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரிசி, சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களான 1.98 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
 விடுபட்டோருக்கும் கிடைக்கும்: ஒவ்வொரு நியாயவிலை கடை யின் எல்லைக்கு உட்பட்ட தெருக்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதில் விடுபட்டோருக்கும் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் கடந்த திங்கள்கிழமை முதல் இப்போது வரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற நேரம் இருக்காது. எனவே, அவர்களது வசதிக்காக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளிலும் நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும். விடுபட்டோர் என்ற அடிப்படையில் அவர்கள் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அரிசி மற்றும் சர்க்கரை அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். எந்தப் பொருளும் வேண்டாதோர் அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே அளிக்கப்படும்.
 எப்போது விடுமுறை: ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகள் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறையாகும். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு வார விடுமுறை விடப்பட்டிருக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகள் செயல்பட்டன. எனவே, அந்த பணி நாளுக்குப் பதிலாக வரும் 16-ஆம் தேதியன்று நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
 பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் 15-ஆம் தேதியும் கடைகள் இருக்காது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற விரும்புவோர் வரும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நியாய விலைக் கடைகளுக்குó சென்று பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com