பொங்கல் பரிசுக்கு ஒப்புதல் தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதுவை ஆளுநருக்கு முதல்வர் எச்சரிக்கை

புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று
பொங்கல் பரிசுக்கு ஒப்புதல் தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதுவை ஆளுநருக்கு முதல்வர் எச்சரிக்கை

புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முதல்வர் வே.நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.
 இதுதொடர்பாக, அவர் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
 புதுவையில் நிலவும் பிரச்னைகளை முன்வைத்து, 21 அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து தில்லியில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுவை மக்களின் பிரச்னைகள் தேசிய அளவில் ஓங்கி ஒலித்தது இதுவே முதல்முறை.
 புதுவை மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க கோப்பை தயார் செய்து அமைச்சரும், நானும் (முதல்வர்) அக்டோபர் மாத இறுதியில் ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பினோம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசை வழங்க வேண்டும் எனக் கூறி, அவர் நவம்பர் மாதம் அந்தக் கோப்பைத் திருப்பி அனுப்பினார்.
 பொங்கல் பரிசு என்பது அரசின் திட்டம். இனி வரும் காலங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அரசின் இலவசப் பொருள்கள் என்று கூறி, ஆளுநர் அனுப்பிய கோப்பை ஏற்காமல் ஏற்கெனவே திருப்பி அனுப்பியிருந்தோம். அமைச்சருக்கு நான் கையொப்பமிட்டு திருப்பி அனுப்பிய கோப்பை, கிரண் பேடி நான் ஒப்புக் கொண்டதாகக் கூறி அரசிதழில் வெளியிட்டுள்ளார்.
 வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் இலவசப் பொருள்கள் என்பதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறவில்லை. அமைச்சரவையின் ஒப்புதலின்றி எப்படி நியமன எம்.எல்.ஏ. விவகாரம் குறித்து அரசிதழில் வெளியிட்டாரோ, அதுபோலவே இந்த விஷயத்திலும் அவர் நடந்து கொண்டுள்ளார்.
 துணை நிலை ஆளுநருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அமைச்சரவைக்கு கோப்பு அனுப்பப்படும். பின்னரும் ஏற்காவிட்டால், உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்படும்.
 தமிழக அரசு பொங்கல் பரிசுப் பொருள்கள் மட்டுமன்றி, ரூ. ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் பொங்கல் பொருள்களுக்கு தடை விதிக்கவில்லை. குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. ஆயிரம் அளிப்பதற்கு மட்டும்தான் தடை விதித்தது.ஆனால், புதுவை துணை நிலை ஆளுநர் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத்தான் பொங்கல் பரிசு எனக் கூறி, நாங்கள் அனுப்பிய கோப்பைத் திருப்பி அனுப்பினார். துணை நிலை ஆளுநர் குறிப்பிட்ட உத்தரவு, புதுவைக்கு பொருந்தாது.
 சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, புதுவையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கலாம். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கவேண்டிய பொங்கல் பரிசைத் தடுத்து நிறுத்தினால், ஆளுநர் கிரண் பேடி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com