சுடச்சுட

  

  புதுவையில் மார்ச் 1 முதல் நெகிழிப் பொருள்களுக்குத் தடை

  By  புதுச்சேரி,  |   Published on : 14th January 2019 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  narayanasamy

  புதுவையில் மார்ச் 1 முதல் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்குத் தடை விதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
   புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டி:
   புதுவையில் நெகிழிக் குவளைகள், தட்டுகள், விரிப்புகள், பைகள் ஆகியவற்றை தடை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மார்ச் 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும்.
   இடைப்பட்ட காலத்தில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
   ஏஎப்டி பஞ்சாலை, சுதேசி பஞ்சாலை மற்றும் பாரதி பஞ்சாலையைப் பொருத்தவரை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
   ஏஎப்டி பஞ்சாலையில் மூன்றாவது யூனிட் நடத்தவும், மீதியுள்ள தொழிற்சாலைகள் சம்பந்தமாக இறுதி முடிவு சில காலம் கழித்து எடுக்கப்படும்.
   பாசிக், பாப்ஸ்கோவில் மதுக் கடைகளை ஏலத்தில் விட்டு, அதில் இருந்து வரும் நிதியைக் கொண்டு அந்த நிறுவனங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   இருளர், வில்லி, வேட்டைக்காரன் ஆகிய சாதியினருக்கு மலைவாழ் மக்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் தரம் வாய்ந்த கட்டட கலைக் கல்லூரி அமைக்கப்படும்.
   லாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, புதுவை எரிசக்திக் கழகம் (பவர் கார்ப்பரேஷன்), வடிசாராய ஆலை, தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் நிறைவேற்றுவோம். இந்த பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வரும்.
   முதல்கட்டமாக 8 அரசுக் கல்லூரிகளுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
   புதுவையில் ஏழை மக்களுக்கு சிறிய கல் வீடுகளில் குடியிருந்தாலும், அது அரசு புறம்போக்கு நிலத்தில் வாங்கியிருந்தாலும், குடியிருப்பு சட்ட அடிப்படையில் அவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றார் நாராயணசாமி.
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai