கொடநாடு விடியோ: ஆளுநரிடம் திமுக முறையிடும்

கொடநாடு விடியோ விவகாரத்தை குடியரசுத் தலைவர், ஆளுநரிடம் திமுக கொண்டு செல்லும் என அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொடநாடு விடியோ: ஆளுநரிடம் திமுக முறையிடும்

கொடநாடு விடியோ விவகாரத்தை குடியரசுத் தலைவர், ஆளுநரிடம் திமுக கொண்டு செல்லும் என அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 இதுதொடர்பாக சென்னை அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
 கொடநாடு விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்திய தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், அதனை சிடி வடிவில் தில்லியில் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். 5 பேர் மரணம் விபத்தல்ல, அது கொலைதான் என்பன உள்ளிட்ட பல விஷயங்களை பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சயன் என்பவரும், வலையார் மனோஜ் என்பவரும் இப்போது பேட்டியளித்திருக்கின்றனர்.
 இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சனிக்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்லமுடியவில்லை.
 எனவே, இதுதொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்து விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும். முதல்வரை அழைத்து குடியரசுத் தலைவரும், ஆளுநரும் விளக்கம் கேட்க வேண்டும்.
 இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் ஆகியோரின் கவனத்துக்கு திமுக கொண்டு செல்வோம்.
 உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தக்கோரியே திமுக வழக்கு: உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காக திமுக வழக்கு போடவில்லை. உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று கோரியே வழக்கு போட்டோம். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்தபோது, கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேனா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 பாப்பாரம்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருந்த நிலையில், 2006 இல் திமுக-தான் அதை நடத்தியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கியது, நவம்பர் 1-ஐ உள்ளாட்சிகள் தின விழாவாக அறிவித்துக் கொண்டாடியது, சமத்துவபுரங்கள் அமைத்தது, நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.
 எனவே, இன்றைக்கு திமுக மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு திமுக வழக்கு போட்டதுதான் காரணம் எனக் கூறி வருகின்றனர். தேர்தலை முறையாக நடத்தவேண்டும் என்தற்காகத் தான் திமுக வழக்குபோட்டது.
 மேலும், நீதிமன்றத்தில் 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவோம் என கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக அரசு கூறியது. அதன் பிறகு 6 மாதங்கள் ஆகிவிட்டபோதும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு யார் காரணம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com