கொடநாடு வீடியோ விவகாரம்: ஆளுநரை சந்தித்து அதிமுக விளக்கம்

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், ஜெயவர்தன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து விளக்கம்
கொடநாடு வீடியோ விவகாரம்: ஆளுநரை சந்தித்து அதிமுக விளக்கம்


கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்.பி, ஜெயவர்தன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.


முன்னதாக கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார்.
இந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக அந்த விடியோவில் சயன், மனோஜ் ஆகியோர் போட்டியளித்திருந்தனர்.


இதையடுத்து திங்கள்கிழமை மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , டி.ஆர்.பாலு,கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா ஆகியோர் சந்தித்தனர் .

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது.
பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கொடநாடு எஸ்டேட் விடியோ விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தோம்.
அந்த மனுவில், முதல்வராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கக்கூடாது. நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விலக அறிவுறுத்த வேண்டும். இந்தக் கொலை வழக்கில் எஞ்சியிருக்கக் கூடிய தடயங்களை அழிக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார்.அவர் உடனடியாக பதவி விலகி பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
நாங்கள் கூறியதையெல்லாம் ஆளுநர் கூர்ந்து கேட்டார். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயம் எடுப்பேன் என்ற உறுதியையும் அவர் தந்துள்ளார்.

இந்தத் தகவலை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளோம்.


இந்நிலையில் இன்று மாலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஜெயவர்தன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.
ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் அளித்தோம் என்றார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக ஆளுநரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தவறான கருத்து கூறினால் 7 வருட சிறை உண்டு என்பதை  ஸ்டாலின் உணர வேண்டும் என்றார்.

 கொடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பதை சசிகலா தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார் என தெரிவித்தார்.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com