போகிப் பண்டிகை: சென்னையில் கடந்த ஆண்டை காட்டிலும் காற்று மாசு குறைவு

போகிப் பண்டிகையின்போது, சென்னையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று மாசு 40 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு


போகிப் பண்டிகையின்போது, சென்னையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று மாசு 40 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. 
சென்னையில் கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக அன்றைய தினம் மட்டும் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காற்றில் துகள்களின் அளவு 386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது.
இந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், போகிப் பண்டிகையின்போது, இதுபோன்ற பொருள்கள் எரிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
குறிப்பாக சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 13) செவ்வாய்க்கிழமை காலை வரை கண்காணிப்புப் பணி மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 15 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் காற்று மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.
போகிப் பண்டிகையையொட்டி, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே (ஜன.13) பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பயனற்ற பழைய பொருள்களை எரித்தனர். இதனால், சென்னையில் திங்கள்கிழமை அதிகாலை புகை மூட்டம் நிலவியது. கடந்த சில நாள்களாக சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் புகைமூட்டமும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சென்னையில் இருந்து புறப்படும் சில விமானங்களும், மின்சார ரயில்களும் சிறிது தாமதமாக இயக்கப்பட்டன.
காற்று மாசு குறைவு: இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு பகுதிகளில் போகிக்காக எரிக்க வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தீங்கு விளைவிக்கும் கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் போகிப் பண்டிகை நாளான திங்கள்கிழமை (ஜன. 14) காற்றில் உள்ள பிஎம்2.5, பிஎம்10 ஆகிய நுண்துகள்களின் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகரித்திருந்தது. இதன்படி, திங்கள்கிழமை காலை பிஎம்2.5 நுண் துகளின் அளவு 20 கன மீட்டர் முதல் 109 கன மீட்டர் வரையிலும், பிஎம்10 நுண் துகளின் அளவு 126 கனமீட்டர் முதல் 249 கன மீட்டர் வரை இருந்தது. குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்பநிலை, மிதமான காற்றின் வேகம், காற்று மாசு குறித்து பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், காற்றில் உள்ள பிஎம்10 நுண்துகளின் அளவு 40 சதவீதம் குறைந்திருந்தது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com