தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 
தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு


பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

கடந்த 1998-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனைச் செய்யப்படுவதை தடுக்கக் கோரி போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசுப் பேருந்து, காவல்துறை வாகனம் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதனிடையே பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து வரும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். 

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 

"முந்தைய காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டவர், தற்போது சட்டத்தை வகுக்கும் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்பது வியப்பாக உள்ளது. பாரம்பரிய மதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரக்கூடிய காலக்கட்டத்தில் யாரும் பொது வாழ்வில் புனிதராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. மேலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது உண்மையான மக்கள் பிரதிநிதிக்கான அடையாளம் இல்லை. இந்த விவகாரத்தில் ஆதாரங்களை ஆராய்ந்து பார்க்காமல் இடைக்கால கோரிக்கையில் முடிவெடுப்பது சரியாக இருக்காது. மேலும் இந்த விவகாரத்தில் தண்டனை விதித்துள்ள சிறப்பு நீதிமன்ற உத்தரவில் முகாந்திரம் உள்ளது. எனவே விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ, தீர்ப்புக்கு தடை விதிக்கவோ முகாந்திரம் இல்லை. எனவே முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியை குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது" எனக்கூறி, பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் பிரதான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com