தொடர்ந்து 7-வது நாளாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து 7வது நாளாக அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 7-வது நாளாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!

 
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து 7வது நாளாக அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து 7 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை (ஜன.17) அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.15 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.42 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07 ஆக இருந்தது. இப்போது ஒரு லிட்டருக்கு ரூ.2.08 அதிகரித்துள்ளது. டீசலைப் பொறுத்தவரையில் 5 நாள்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.66.01 ஆக இருந்தது. இப்போது ரூ.2.41 அதிகரித்துவிட்டது.

கடந்த ஒன்றரை மாதமாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், எரிபொருள் விலை உயர்வு அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் காரணமாக அமைகிறது. லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறி உள்ளிட்ட பொருள்களை எடுத்து வரும் செலவு அதிகரிப்பதைக் காரணம் காட்டி அவற்றின் விலை உயர்த்தப்படுகிறது.

இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 என்ற உச்ச விலையில் இருந்தது. அதே மாதம் 17-ஆம் தேதி டீசல் விலை உச்சத்தை எட்டி, ஒரு லிட்டர் ரூ.80.04-க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. 

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்தது. 

கடந்த 10 ஆம் தேதி முதல் ஏறுமுகத்தை கண்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தநிலையில், நேற்று புதன்கிழமை (ஜன.16) மட்டும் பெட்ரோல் விலை உயராமல் 8 காசுகள் குறைந்தது. ஆனால் டீசல் தொடர்ந்து உயர்ந்தது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.73.15ஆகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.68.42 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதத்தில் சற்று இறங்கு முகத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது, மீண்டும் ஒருவாரமாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.70.47 ஆகவும், டீசல் லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.64.78 ஆகவும் உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகளும், டீசல் லிட்டருக்கு 20 காசுகளும் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.11 ஆகவும், டீசல் ரூ.67.82 ஆகவும் உள்ளது. உள்ளூர் விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரிக்கு ஏற்ப மாநிலங்களுக்கு மாநிலம் பெட்ரோல் டீசல் விலை வேறுபடும். சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலையில் இருந்து பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com