சுடச்சுட

  

  உதகையில் தொடரும் உறைபனி: குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ்

  By DIN  |   Published on : 18th January 2019 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ooty

  தலைக்குந்தா புல்வெளியில் கொட்டியிருந்த உறை பனியில் புகைப்படமெடுத்து ரசிக்கும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள்.


  உதகையில் உறைபனிக் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை நகரப் பகுதிகளில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸையும், புறநகர்ப் பகுதிகளில் மைனஸ் 5 டிகிரி செல்சியஸையும் எட்டியுள்ளது.
  உதகையில் கடந்த 10 நாள்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் தொடர்ந்து உறைபனி கொட்டி வருவதோடு கடும் குளிரும் நிலவுகிறது. உதகை நகரப் பகுதிக்குள்ளேயே அமைந்துள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் தொடர்ந்து பூஜ்யம், மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை பதிவான நிலையில் வியாழக்கிழமை அதிகாலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதைப் போலவே, புறநகர்ப் பகுதிகளான காந்தல், சாண்டிநள்ளா, தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளிலும், வனப் பகுதிகளை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வரை எட்டியுள்ளது.
  உதகையில் தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ள சூழலில் தொடர்ந்து உறைபனி கொட்டி வருவது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக காந்தல் விளையாட்டு மைதானம், தலைக்குந்தா புல்வெளி போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை காலையில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
  உறை பனியின் தாக்கம் நீலகிரியில் மேலும் இரு நாள்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது கொட்டும் உறை பனியின் அளவைப் பார்க்கையில் பிப்ரவரி வரையிலும் உறைபனியின் தாக்கம் இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
  தொடர் உறைபனியின் காரணமாக உதகை, சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் தேயிலைச் செடிகள் கருகிவிட்ட நிலையில், தண்ணீர் வசதியில்லா நிலப்பரப்புகளில் மலைக் காய்கறி விவசாயமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai