குழந்தைகளை குறிவைக்கும் சிகரெட் நிறுவனங்கள்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பள்ளி மாணவர்களையும், குழந்தைகளையும் குறிவைத்து புகையைத் திணிக்கும் சிகரெட் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது கண்டிக்கத்தக்கது.
குழந்தைகளை குறிவைக்கும் சிகரெட் நிறுவனங்கள்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


பள்ளி மாணவர்களையும், குழந்தைகளையும் குறிவைத்து புகையைத் திணிக்கும் சிகரெட் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளின் வழியாக 8 வயது குழந்தைகள் கூட புகைப்பிடிக்கும்  வழக்கத்திற்கு அடிமையாக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவர்களையும்,  குழந்தைகளையும் குறிவைத்து புகையைத் திணிக்கும் சிகரெட் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இந்தியாவின் 6 மாநிலங்களில் உள்ள 20 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் சிகரெட் விற்கப்படுவது பற்றி நுகர்வோர் குரல் (Consumer Voice), இந்திய தன்னார்வ சுகாதார சங்கம் (Voluntary Health Association of India) ஆகிய அமைப்புகள் இந்த ஆய்வுகளை நடத்தின. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் உட்பட நாடெங்கும் 20 மாவட்டங்களில் உள்ள 243 பள்ளிகளைச் சுற்றி சிகரெட் விற்பனை நடைபெறும் 487 இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 225 இடங்களில் பள்ளிக் குழந்தைகளை குறிவைத்து சிகரெட் சந்தைப்படுத்தப்படுவதும், காட்சிப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இவற்றில் 91 விழுக்காடு இடங்களில் சிகரெட்டுகள் குழந்தைகளின் கண்களில் எளிதில் படும் வகையில் ஒரு மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருக்கின்றன. 54% கடைகளில் புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்த எந்த எச்சரிக்கையும் வைக்கப்படவில்லை. 90 விழுக்காடு கடைகளில் மிட்டாய்கள், பொம்மைகள் ஆகியவற்றையொட்டி சிகரெட் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, பல கடைகளில் மாணவர்கள்  உள்ளிட்ட வாடிக்கையாளர்களை கவரும் நோக்குடன் தள்ளுபடி விலையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன; இன்னும் சில கடைகளில் அவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன. சில்லரை விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தடையை மீறி பெட்டிகளைப் பிரித்து ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையிலும் சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த உத்திகள் அனைத்தும் மாணவர்களையும், குழந்தைகளையும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் நோக்கம் கொண்டவை ஆகும். இந்த தந்திரங்கள் எதுவும் கடைக்காரர்களால் செய்யப்படுவதில்லை. மாறாக, சிகரெட் நிறுவனங்கள் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின்படி தான் இவை செய்யப்படுகின்றன. இதற்காக கடைகளின் உரிமையாளர்களுக்கு சிகரெட் நிறுவனங்கள் தாராளமாக பணம் கொடுக்கின்றன.

புகையிலை மற்றும் சிகரெட் பழக்கம் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இறப்புக்கு காரணம் புகையிலை தான் என்று தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புகையிலை மற்றும் சிகரெட்டுக்கு  இவ்வளவு பேர் இறப்பதால் குறையும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டுவதற்காக, புதிய நுகர்வோராக குழந்தைகளை உருவாக்கும் நோக்குடனேயே இத்தகைய செயல்களில் சிகரெட் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

சிகரெட் நிறுவனங்களின் இந்த செயல்களால் 8 வயது குழந்தைகள் கூட புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். சிகரெட் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படங்களில்  கதாநாயகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் திணித்து அதன்மூலமாக குழந்தைகள் மற்றும் மாணவர்களை புகைக்கு அடிமையாக்கும் உத்தியையும் சிகரெட் நிறுவனங்கள் செய்கின்றன. இதற்கு தெரிந்தோ, தெரியாமலோ திரைத்துறையினரும் துணை போகின்றனர். இத்தகைய செயல்கள் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தின் 5 மற்றும் 6-ஆவது பிரிவுக்கு எதிரானதாகும். இப்பிரிவுகளின் படி சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்தல் மற்றும் காட்சிப்படுத்துதல்,  18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விற்பனை செய்தல், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் புகையிலைப் பொருட்களை விற்றல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆனால், இந்த விதிமீறலைத் தடுக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. 

இளம் வயதிலேயே மாணவர்கள் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதால் ஏராளமான பாதிப்புகள்  ஏற்படுகின்றன. இளம்வயதில் முக்கிய உறுப்புகள் போதிய முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதால், அவை மிக எளிதாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் உள்ளிட்ட எவரும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பயன்பாட்டால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத் தான் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

ஆனால், அவை எதுவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததன் விளைவாக குழந்தைகள் உள்ளிட்ட இன்றைய இளைய தலைமுறையினரை சிகரெட்டுக்கு அடிமையாக்கி அழிக்கும் முயற்சியில் சிகரெட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். எனவே, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தனி உரிமம்  பெற வேண்டும்; அந்தக் கடைகளில் சாக்லெட்டுகள், மிட்டாய்கள், பொம்மைகள், ரொட்டிகள், மென் பானங்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு விருப்பமான எந்தப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது  என்ற சுகாதார அமைச்சகத்தின் யோசனையை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com