அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: மாடுகள் முட்டியதில் 40 பேர் காயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளையை அடக்கும் மாடுபிடி வீரர். 
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளையை அடக்கும் மாடுபிடி வீரர். 


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க முயன்ற 40 பேர் 
காயமடைந்தனர். 
அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையொட்டி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதலே அலங்காநல்லூருக்கு காளைகள் கொண்டு வரப்பட்டன. மேலும் மாடுபிடி வீரர்களும் அங்குள்ள வாடிவாசல் பகுதியில் திரண்டனர். காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டதும் அது அவிழ்த்து விடப்பட்டது. 
மேலும் வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வாசிக்க மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 8.30 மணிக்கு வாடி வாசலுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து பச்சைக்கொடி காட்டி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வாடி வாசல் வழியாக காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரர்கள் 100 பேர் கொண்ட குழுவாக களமிறக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளின் திமிலைப்பற்றி வீரர்கள் அடக்கினர். இதில் பல காளைகள் அவர்களிடம் சிக்காமல் களத்தை சுற்றி வந்து வீரர்களை கொம்பால் தூக்கி வீசின. ஜல்லிக்கட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஒத்தக்கொம்பன், செவலை கொம்பன், வெள்ளை கொம்பன் ஆகிய 3 காளைகளும் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக விடப்பட்டன. மேலும் மூன்று காளைகளையும் பிடித்தால் ஏராளமான பரிசுகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 காளைகளும் வீரர்களை நெருங்க விடாமல் சீறிப்பாய்ந்து சென்றன. இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், மாணிக்கம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், வீர விளையாட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோரின் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இதில் சிறிய காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்த 14 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் காளைகளை அடக்கி சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் எண்கள் வாசிக்கப்பட்டு அவர்கள் அடக்கிய காளைகளின் எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். விதிமுறைகளை மீறியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தேசிய விலங்குகள் நல வாரியக்
குழுவினர் ஜல்லிக்கட்டை கண்காணித்து ஆலோசனைகளை வழங்கினர். களத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்டு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜல்லிக்கட்டில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், பி.மூர்த்தி, வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பி.ராஜசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
தென் மண்டலக் காவல்துறைத் தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், மதுரை சரக துணைத்தலைவர் பிரதீப்குமார், ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணிகளுக்காக விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கரூர் அருகே 36 பேர் காயம்: கரூர் மாவட்டம் ராசாண்டார் திருமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 36 பேர் காயமடைந்தனர். 
காளைகளை பிடிக்க முயன்ற புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த சதீஷ் குமார் (22), கரூர் ராசாண்டார் திருமலையைச் சேர்ந்த கார்த்திக் (27), மயிலாடியைச் சேர்ந்த சுபாஷ் (26) மற்றும் பார்வையாளர் ராசாண்டார் திருமலையைச் சேர்ந்த ஆண்டியப்பன் (75) உள்பட மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். 
சிராவயலில் 70 பேர் காயம்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, சிராவயல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், தென்கரை கண்மாய் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக அவிழ்த்து
விடப்பட்டன. 
மாடுகள் முட்டியதில் திண்டுக்கல் சானார்பட்டியைச் சேர்ந்த கண்ணன்(24), ஏரியூர் சந்திரன்பட்டியைச் சேர்ந்த மருதையா(54), மற்றும் போலீஸார் உள்பட 70 பேர் காயமடைந்தனர்.


சென்னையில் முதல்வர், துணை முதல்வர் கார் பரிசளிக்கின்றனர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரர் மற்றும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்பட்ட காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சென்னையில் கார் பரிசாக வழங்குகின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சார்பிலும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பிலும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அவை வாடிவாசல் அருகே மேடையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் முதலிடம் பெற்று சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 10 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாமிடமும், 8 காளைகளை பிடித்த அஜய் மூன்றாமிடமும் பிடித்தனர். 
இதே போல களத்தில் சிறப்பாக விளையாடிய 3 காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் மதுரை மாவட்டம் பரம்புபட்டியைச் சேர்ந்த சென்னியம்மன் கோயில் காளை களத்தில் சிறப்பாக விளையாடியதால் முதலிடம் பெற்றது. மதுரையைச் சேர்ந்த சி.ஆர்.கார்த்திக்கின் காளை இரண்டாமிடமும், குருவித்துறையைச் சேர்ந்த எம்.கே.எம். என்பவரின் காளை மூன்றாமிடமும் பிடித்தன. 
இதில் முதலிடம் பெற்ற மாடுபிடி வீரர் ரஞ்சித் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 
ஆகியோர் காரை பரிசாக வழங்குவர் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com