அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன்; இனி அப்படி நடக்காது: அமைச்சர் உறுதிமொழி

அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன். இனி அப்படி நடக்காது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன்; இனி அப்படி நடக்காது: அமைச்சர் உறுதிமொழி


மதுரை: அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன். இனி அப்படி நடக்காது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

விழிப்புணர்வுப் பிரசாரத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு பொறுப்பேற்கும் விதமாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விழிப்புணர்வுப் பிரசாரத்துக்குச் செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன். இனிமேல் இதுபோல் நடக்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய விஜய பாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் விவரம்: 
தமிழக சுகாதாரத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் சுகாதார நல்வாழ்வு முகாம் நடைபெற்றது. அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, அதில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தலைக்கவசம் அணியவில்லை. அங்கு உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்தும் இலுப்பூர் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அமைச்சர் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் யதார்த்தமாக கலந்து கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆகவே, இதனை பெரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தலைக்கவசம் பாதுகாப்புக்காக அணிவது. அது சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்தனர். 

மேலும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்கு பொறுப்பேற்கும் விதமாக, அமைச்சர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். தவறினால், நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, அமைச்சர் தரப்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com