காந்தியம் ஆக்கப்பூர்வமான சித்தாந்தம்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் 

காந்தியம் என்பது ஆக்கப்பூர்வமான சித்தாந்தம். அதனால் மட்டுமே உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
காந்தியம் ஆக்கப்பூர்வமான சித்தாந்தம்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் 


காந்தியம் என்பது ஆக்கப்பூர்வமான சித்தாந்தம். அதனால் மட்டுமே உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
தினமணி நாளிதழ், மதுரை காந்தி அருங்காட்சியகம், காந்தி கல்வி நிலையம் ஆகியவை சார்பில் அண்ணலின் அடிச்சுவட்டில் யாத்திரை நிறைவு விழா சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று யாத்திரையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கி தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது: 
காந்தியம் இன்னும் உயிர்ப்புடன் செயல்படுகிறது என்பதன் அடையாளமாகத்தான் அண்ணலின் அடிச்சுவட்டில் யாத்திரை நடத்தப்பட்டது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும் காந்தியடிகள் ஆசைப்பட்டு மூலை முடுக்கெல்லாம் நடந்தும், ரயிலிலும் பயணித்த ஒரே ஒரு மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு மட்டுமே உண்டு. 
காந்தியடிகள் இந்த உலகத்துக்கு வழங்கிய மிகப்பெரிய கொடை அவர் எழுதிய சுயசரிதையான சத்திய சோதனை. அது அவரது தாய்மொழியான குஜராத்தியில்தான் எழுதப்பட்டது. ஏனெனில் தாய்மொழி என்பது உதிரத்தில் கலந்தது; தேசம் என்பது இதயத்தில் கலந்தது. தாய்மொழிக் கல்விக்கு முனைப்புடன் குரல் கொடுத்தவர் மகாத்மா காந்தி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
காந்திய சிந்தனை கொண்ட இளைஞர்கள்தான் தமிழகத்தை மாற்றிக் காட்ட வேண்டும். தமிழகம் மாறினால்தான் இந்தியா மாறும். இந்தியாவைப் பொருத்தவரை இங்குள்ள ஒவ்வொரு பிரச்னையும் மாநிலப் பிரச்னை. ஆனால் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு தேசியத்தில்தான் உள்ளது. மாநிலப் பிரச்னைகளுக்கு தேசியத்தால்தான் தீர்வு காண முடியும். இதை உணர்ந்துதான் மகாகவி பாரதியார் வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழ் வாழிய பாரத மணித்திருநாடு என்று தமிழ் தேசியத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
காந்தியம் என்பது எதைக் காட்டுகிறது. அது சொல்லும் செய்தி என்ன என்பது குறித்து சிலருக்கு மனதில் பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன. எதிர்மறைச் சிந்தனைகளில் உலவிக் கொண்டிருப்பவர்கள் காந்தியைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கின்றனர்.
காந்தியம் ஒன்றுதான் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தாமல் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான சித்தாந்தம். இப்படியொரு வழிமுறையை தத்துவத்தை அவருக்கு முன்னால் வேறு யாரும் சொல்லவில்லை. அவரது அந்த ஆக்கப்பூர்வமான சித்தாந்தம்தான் உலகின் தலைசிறந்த சிந்தனாவாதிகளை வியப்பில் ஆழ்த்தி அண்ணல் காந்தியடிகளை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. நல்ல விஷயங்களை அடைவதற்குக் கூட தவறான வழியில் சென்றுவிடக் கூடாது என்ற உயரிய சிந்தனையை காந்தியம் வலியுறுத்துகிறது. 
உலகத்திலேயே காந்தியத்துக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்னவெனில், காந்தியம் மட்டுமே ஆக்கப்பூர்வமான சித்தாந்தம்; அது யாரையும் அழிக்க வேண்டும்; எதிரி என கருத வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை. 
காந்திஜியை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டவர்களுக்குத்தான் இப்படியொரு மகான் நம்மிடையே உலவினார் என்பது புரியும். காந்தியடிகளின் தனிச்சிறப்பு அவர் தனது சிந்தனையிலும் செயலிலும் பலவீனர்களின் பக்கம் மட்டுமே நின்றார் என்பதுதான்.
சுதந்திரப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும், காந்தியத்தைப் பரப்பவும் 1934 செப்டம்பர் 11-இல் தினமணி நாளிதழ் தொடங்கப்பட்டது. காந்திஜியின் இயக்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக தினமணி தொடங்கப்படுவதாக அதன் நிறுவன ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் தனது முதல் நாள் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தினமணி அன்று ஏற்றுக்கொண்ட காந்தியக் கனவின் 
நீட்சி தான் இந்த அண்ணலின் அடிச்சுவட்டில் யாத்திரை. தினமணியின் கனவு இன்று இந்த இளைஞர்கள் மூலம் நனவாகிறது.
இன்றைய இளைஞர்களிடம் காந்தியம் என்ற அணையாச் சுடர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை ஏந்திக் கொண்டு காந்தியத்தை புரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் அதனால் தமிழகம் மட்டுமல்ல வையகமே பயனடையும் என்றார் அவர்.
விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேங்கடரமணா, பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், காந்தி கல்வி நிலையத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எஸ்.ஜெயராஜ், தி.விப்ரநாராயணன், சு.சிவலிங்கம், சுபாஷிணி, அ.முத்துவேலு, ம.நித்யானந்தம், சு.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தியாகிகளின் வரலாற்றைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள்: லட்சுமிகாந்தன் பாரதி
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளின் வரலாற்றை படிக்க இளைஞர்கள், மாணவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி வலியுறுத்தினார். 
இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அண்ணலின் அடிச்சுவட்டில் யாத்திரை நிறைவு விழாவில் லட்சுமி காந்தன் பாரதி பேசியது: 
உண்மையான காந்திய சிந்தனை எது என்பது குறித்து இளைஞர்கள், மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அஹிம்சை மட்டுமே காந்தியம் அல்ல; காந்தி கனவு கண்ட நேர்மையான ஆட்சியை கொண்டு வர வேண்டும். அதற்கு அளவு கடந்த தேசப்பற்று அவசியம். இந்த சிந்தனை பரவத் தொடங்கினால் 20 ஆண்டுகள் கழித்து நாடு முழுவதும் காந்தியவாதிகளே இருப்பார்கள்.
நாட்டுக்காக உழைத்த தியாகிகளை இளைஞர்கள் நினைவுகூர வேண்டும். அதற்காக அவர்களின் வரலாற்றைப் படிக்க மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும். இதன் மூலம் சில ஆண்டுகளில் பல தலைவர்களின் வரலாற்றையும், தியாகங்களையும் அறிந்து கொள்ள முடியும். 
அதேபோன்று அனைத்து பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இடம்பெற வேண்டும். மேலும் காந்தியை நினைவு கூரும் வகையில் மாதம் ஒரு முறை கதர் ஆடையை அணிய வேண்டும் என்றார்.

ஆளுநருடன் கலந்துரையாடிய மாணவர்கள்
அண்ணலின் அடிச்சுவட்டில் யாத்திரையில் பங்கேற்ற மாணவர்கள் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் வியாழக்கிழமை கலந்துரையாடினர்.
அப்போது மாணவர்கள் வாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். இலக்கை அடைவதற்கான முயற்சியை எப்போதும் கைவிடக் கூடாது. காந்திய வழியைப் பின்பற்றி தேசப்பற்று மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை வழங்கினார். மேலும் காந்திய பயணத்தில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com