சமையல் எரிவாயு கசிவுக்கான அவசர தொடர்பு வசதி எளிமைப்படுத்தப்படுமா?

சமையல் எரிவாயு உருளையில் இருந்து எரிவாயு கசிவதால் ஏற்படும் பெரும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், கடந்த 2016-இல் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட
சமையல் எரிவாயு கசிவுக்கான அவசர தொடர்பு வசதி எளிமைப்படுத்தப்படுமா?

சமையல் எரிவாயு உருளையில் இருந்து எரிவாயு கசிவதால் ஏற்படும் பெரும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், கடந்த 2016-இல் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட அவசர சேவைத் தொடர்பு வசதியை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
விறகுகளை வெட்டி சமைத்து வந்த மனித குலத்தின் மிகப்பெரிய பரிணாமம்- சமையல் எரிவாயு. விமர்சனங்கள் பல எழுந்தாலும், கணிசமான வீடுகளின் மிக இன்றியமையாத ஒன்றாக சமையல் எரிவாயு மாறியிருக்கிறது.
நாடு முழுவதும் 24 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 2 கோடி எரிவாயு இணைப்புகள் உள்ளன. இந்நிலையில்தான், உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் மேலும் 8 கோடி இணைப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் இந்தத் துறையில் ஜாம்பவான்கள். தனியார் நுழைந்தபோதும்கூட!
இந்நிலையில், ஆங்காங்கே எரிவாயு உருளை வெடித்த விபத்துகளும் நம்மைப் பேரச்சத்தில் ஆழ்த்துகின்றன. அதேநேரத்தில் வெடிக்காத எரிவாயு உருளைகள் என்ற பெயரில் வித்தியாசமான உருளைகளும் களத்தில் வந்துவிட்டிருக்கின்றன.
இந்நேரத்தில், எரிவாயு கசிவு குறித்து தெரிவித்து பெரும் விபத்தைத் தவிர்ப்பதற்கான அவசர சேவை அழைப்பு எண் முறை அவசர சேவையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 
அதாவது, 2016-ஆம் ஆண்டு முன்பு வரை எரிவாயு உருளையில் இருந்து எரிவாயுக் கசிவு உணரப்பட்டால் அந்தந்தப் பகுதி விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொள்ளலாம். வழக்கம்போல விநியோகஸ்தர்களின் தொடர்பு எண் கிடைக்கவே கிடைக்காது. அதற்குள் கிராமங்களில் நோய்களைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் கை வைத்தியம் போல தங்களுக்குத் தெரிந்த, அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்குத் தெரிந்த முறைகளின்படி பிரச்னை தற்காலிகமாகத் தீர்க்கப்படும்.
2016 ஜனவரி 1 முதல் மத்திய அரசு பொதுவான அவசரத் தொடர்பு எண் 1906-ஐ அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. இந்த எண்ணை பிஎஸ்என்எல் உள்ளிட்ட தரைவழித் தொலைபேசி இணைப்புகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியாது. எண் தவறாகத் தெரிகிறது என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது.
செல்லிடப்பேசிகளில் இருந்து மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். தானியங்கி முறைப்படி அமைக்கப்பட்டிருக்கும் இம்முறையில் முதலில் மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். தமிழில் பேசும் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி அத்தனை சுலபமாகக் கிடைக்க மாட்டார்.
நொய்டா என்ற பகுதியில் இருந்து இந்தச் சேவை இயக்கப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் சேவை மைய அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றபோதும், அவசர சேவை என்ற நோக்கிலிருந்து பார்க்கும்போது இந்தச் சேவை மோசமானதாகவே கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2 கோடி எரிவாயு இணைப்புகள் உள்ளன என்கிறபோது, தனியாகவே சென்னையிலோ அல்லது வேறொரு பெரு நகரிலிருந்தோ இந்தச் சேவையை இயக்கும் வகையில் வசதியை பிரத்யேகமாக உருவாக்கலாம்.
மேலும், தரைவழித் தொலைபேசி எண்களில் இருந்தும் 1906 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் வசதியை உருவாக்கலாம். மையப்படுத்தப்பட்ட ஒரே எண்ணை அவ்வாறு தனித்தனியே மொழிவாரியாக அந்தந்தப் பிராந்தியங்களில் இயக்க முடியாது என்று யாரும் வாதிட முடியாது.
காரணம், காவல் அவசரத் தொடர்புகளுக்காக எல்லா மாவட்டங்களில் இருந்தும் 100 என்ற எண்ணைத்தான் அழைக்கிறோம். அந்த அழைப்பு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அல்லது மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தைத்தான் சென்றடைகிறது.
அதேபோல, 1906 என்ற எண்ணை அந்தந்த மாநில மொழிகளுக்கேற்ப எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் மாற்ற முடியும். பெட்ரோலியத் துறையினர் இந்த வசதியை எளிமைப்படுத்த உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

வாடிக்கையாளர் சேவை எண்ணிலேயே பதியலாம்!
அனைத்து நிறுவனங்களுக்குமான வாடிக்கையாளர் சேவை எண்ணாக 18002333555 என்ற எண் பொருத்தமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த எண்ணில் எரிவாயு கசிவு குறித்த செய்தியைக் கூறினால், ரெகுலேட்டரைக் கழட்டி வைத்துவிட்டு, எரிவாயு உருளையை அதற்காக உள்ள பிரத்யேக மூடியைக் கொண்டு மூடி வைத்துவிடுங்க, கதவு, ஜன்னல்களைத் தாராளமாகத் திறந்து வைத்துவிடுங்க, மின் இணைப்புகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என ஆலோசனைகள் தாராளமாக- கனிவாகவே கூறப்படுகிறது. ஆனால், எல்லாவற்றையும் கூறிய பிறகு 1906-இல் அழைத்து சொல்லிவிட கூறியும் முடிக்கிறார்கள். உண்மையில் அவசரகதியில்- நெருக்கடியான நேரத்தில் இருப்போர் இத்தனை இயல்பாகச் செயல்பட முடியுமா என்பதையும் கவனிக்க வேண்டும். அதே வாடிக்கையாளர் சேவை மையத்திலேயே கூட வாடிக்கையாளர் எண், முகவரி உள்ளிட்டவற்றை வாங்கி வைத்துக் கொண்டு உள்ளூர் விநியோகஸ்தர், தீயணைப்புத் துறை, காவல் துறைக்குத் தகவல்களைப் பரிமாறும் எளிய முறையை வடிவமைக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com