2017 கல்வித் திட்ட நடைமுறையைக் கைவிட வேண்டும்: பொறியியல் மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்

பொறியியல் கல்லூரிகளுக்கு நடைமுறைப்படுத்தியுள்ள 2017 கல்வித் திட்ட நடைமுறையைக் கைவிட வலியுறுத்தி
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்  பேச்சுவார்த்தை நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரி.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்  பேச்சுவார்த்தை நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரி.


பொறியியல் கல்லூரிகளுக்கு நடைமுறைப்படுத்தியுள்ள 2017 கல்வித் திட்ட நடைமுறையைக் கைவிட வலியுறுத்தி  பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து பத்து நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
பொறியியல் கல்வித் திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியமைத்து வருகிறது. கடந்த 2013- இல் மாற்றியமைக்கப்பட்ட பாடத் திட்டம் மீண்டும் 2017 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
இதன் மூலம், பொறியியல் கல்லூரிகளுக்கு விருப்பப் பாடத் தேர்வு முறை (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் மாணவர்கள் படிக்க முடியும்.
அதுபோல, இந்த புதிய கல்வித் திட்டத்தின்படி, அரியர் முறை ரத்து செய்யப்பட்டது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் இரண்டு பாடங்களைக் கைவிட்டுவிட்டு தேர்வு எழுத முடியும். அதோடு, ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக அடுத்த பருவத் தேர்வின்போது எழுதமுடியாது.
மாறாக, அவர் தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்தப் பருவத் தேர்வில் வருகிறதோ, அப்போதுதான் அவர் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.
அதுபோல, படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அடுத்த பருவத்தேர்வுக்கான 2 பாடங்களை முந்தைய தேர்வின்போதே கூடுதலாக சேர்த்து எழுத அனுமதிக்கப்படுகின்றனர். படிப்பின்போது சிறப்பு புராஜெக்ட் செய்ய விரும்பும் மாணவர், அவருடைய 8-ஆம் பருவத்துக்கான பாடங்களில் இரண்டை 6-ஆம் பருவத் தேர்விலும், மற்ற 2 பாடங்களை 7-ஆவது பருவத் தேர்விலும் சேர்த்து எழுத முடியும். இதன் மூலம், 8-ஆம் பருவக் காலத்தில் அந்த மாணவர் தனது சிறப்பு புராஜெக்ட் பணியைச் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவார். இவர்கள் 7.50 சிஜிபிஏ வைத்திருக்கவேண்டும். இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
மாணவர்கள் போராட்டம்:  இதில் பல நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச்  சேர்ந்த  300 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த புதிய நடைமுறை காரணமாக நாங்கள் பட்டம் பெறுவதில் பெரும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரியர் தேர்வை  உடனடியாக எழுத முடியவில்லை. அதற்காக ஓராண்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்  6 ஆண்டுகளுக்குள்ளாக  அனைத்துப்  பாடங்களிலும்  தேர்ச்சி  பெறவேண்டும்  என்பதைக்  கட்டாயமாக்கி இருக்கின்றனர்.  இதனால், பல  மாணவர்கள்  பட்டம்  பெறுவதே  கேள்விக்குறியாகியிருக்கிறது. எனவே, 2017 நடைமுறையை பல்கலைக்கழகம் கைவிட வேண்டும்  என்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.
குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்: அதனைத் தொடர்ந்து  பதிவாளர் குமார் தலைமையிலான பல்கலைக்கழக அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பதிவாளர் குமார் அளித்த பேட்டி:
பல்கலைக்கழகம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவந்த புதிய கல்வித் திட்டத்தை மாணவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கல்வித் திட்டம் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும். அந்தந்த கல்லூரி முதல்வர்களும், இதுதொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தவேண்டும். 
படிப்பில் மாணவர்கள் 32 கிரெடிட் பெறவேண்டும் என உள்ளது. இதை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆன்-லைன் (மூக்ஸ்) பாடமுறை மூலமும் இந்த கிரெடிட்டை மாணவர்கள் உயர்த்திக்கொள்ள முடியும். 
இந்த புதிய கல்வித் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து, நிபுணர்களின்  கருத்தும்  கேட்கப்பட்டு பத்து நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com