கொடநாடு கொலை குற்றச்சாட்டு: திமுகவின் திட்டமிட்ட நாடகம்: முதல்வர் பழனிசாமி புகார்

கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட குற்றச்சாட்டு, திமுகவின் திட்டமிட்ட நாடகம் என்று முதல்வரும், அதிமுக
எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி. 
எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி. 


கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட குற்றச்சாட்டு, திமுகவின் திட்டமிட்ட நாடகம் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகேயுள்ள காட்டுப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:-
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுக  இரண்டாகப் பிளந்தது. அதனை ஒன்றாகச் சேர்த்த பெருமை மறைந்த ஜெயலலிதாவைச் சேரும். உடைந்த கட்சி  ஒன்றாகச் சேர்ந்த வரலாறு எங்கும் இல்லை. கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் பிளவுக்குப் பிறகு ஒன்று சேரவில்லை. ஆனால், உடைந்த அதிமுகவை ஒன்று சேர்த்து இரட்டை இலையைப் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. 
அவரது வழியில் செயல்படும் தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஜெயலலிதா தொடங்கிய திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறோம்.
கொடநாடு குற்றச்சாட்டு: இப்போது திமுகவினர் என்மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். முதல்வரின் மீதே இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அவர்கள் துணிந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கொடநாடு எஸ்டேட் நிகழ்வு, கூலிப்படையால் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-இல் மறைந்தார். அதற்குப் பிறகு கொடநாடு எஸ்டேட் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. அது யாரிடம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அங்கு எங்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் அந்தக் குடும்பத்தினர் நம்மை விட்டு வைப்பார்களா? 
 ஆட்சிக்கு களங்கத்தை கற்பிக்க வேண்டும். முதல்வர் குறித்து தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்று  திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.   என்மீது குற்றம் சுமத்திய சயனுக்கான பிணையை திமுக கட்சிக்காரர் எடுத்துள்ளார்.  எந்த அளவுக்கு அந்தக் கட்சியினர் துணிந்து உள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கொடநாடு எஸ்டேட்டில் சயன் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டினான். அவன் கொடுக்கும் அறிக்கையை வைத்து நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். கொள்ளை, கொலை குற்றம்புரிந்தோருடன் திமுகவுக்கு தொடர்பு உள்ளது.
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு   வேண்டுமென்றே திட்டமிட்டு  திமுகவால் செய்யப்பட்ட நாடகம். இதனை நாம் சட்ட ரீதியாக தவிடுபொடியாக்குவோம். துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலை பின்னப்படுகிறது. இதற்கெல்லாம் திமுக காரணம். அதற்கு ஸ்டாலின் துணை நிற்கிறார். தவறான எண்ணத்தை உருவாக்க போடப்பட்ட நாடகம்.
பொங்கல் பரிசால் பொறுக்க முடியவில்லை: அரசியல் ரீதியாக திமுகவினரால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும், தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசினை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். இதனையும் அவர்களால் பொறுக்க முடியாமல் குற்றம்சாட்டுகிறார்கள் என்று பேசினார் முதல்வர் பழனிசாமி.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com