வளாகத் தேர்வு வாய்ப்பை பொறியியல் மாணவர்கள் இழக்கும் அபாயம்

அண்ணா பல்கலைக்கழக 2017 கல்வித் திட்டத்தால் பொறியியல் மாணவர்கள் வளாகத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில்
வளாகத் தேர்வு வாய்ப்பை பொறியியல் மாணவர்கள் இழக்கும் அபாயம்


அண்ணா பல்கலைக்கழக 2017 கல்வித் திட்டத்தால் பொறியியல் மாணவர்கள் வளாகத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அரியர் ரத்து நடைமுறையை பின்பற்றவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொறியியல் கல்வித் திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியமைத்து வருகிறது. கடந்த 2013- இல் மாற்றியமைக்கப்பட்ட பாடத் திட்டம் மீண்டும் 2017 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
புதிய பாடத் திட்டத்தின்படி, பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு விருப்பப் பாடத் தேர்வு முறை (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் மாணவர்கள் படிக்க முடியும்.
மேலும், அரியர் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் இரண்டு பாடங்களைக் கைவிட்டுவிட்டு தேர்வுஎழுத முடியும். அதே நேரம், ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக அடுத்த பருவத் தேர்வின்போது எழுத அனுமதிக்கப்படமாட்டார். மாறாக, அவர் தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்தப் பருவத் தேர்வில் வருகிறதோ, அப்போதுதான் அவர் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும். இதுபோல பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்தப் புதிய நடைமுறை 2017-18 ஆம் ஆண்டில் பி.இ. முதலாமாண்டு மாணவர்களுக்கும், இப்போது (2018-19) இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் நடைமுறைக்கு வந்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வரும். 
இந்தச் சூழலில், இந்தப் புதிய கல்வித் திட்டத்தின் தாக்கம் இப்போதுதான் மாணவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. அரியர் இருக்கும் மாணவர்கள், கல்லூரிகளில் 7 ஆவது பருவத்தில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வில் பங்கேற் முடியாது என்பதும் மாணவர்களுக்கு இப்போது புரிந்திருக்கிறது. இந்தப் புரிதலைத் தொடர்ந்தே, அண்ணா பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டத்தை அவர்கள் வெள்ளிக்கிழமை நடத்தினர்.
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும்... இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்காந்தி கூறியதாவது: கல்லூரிகளில் நான்காம் ஆண்டு தொடக்கத்தில் (7 ஆவது பருவத்தில்) வளாகத் தேர்வு நடத்தப்படும். வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் அரியர் இல்லாத பொறியியல் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிப்பர். 
ஆனால், பல்கலைக்கழகத்தின் புதிய கல்வித் திட்டத்தால் ஒருவேளை 5 பருவத் தேர்வில் அரியர் வைக்கும் மாணவர், அந்த அரியர் தாள்களை, 7 ஆம் பருவத் தேர்வின்போதுதான் எழுத முடியும். அல்லது 6 பருவத் தேர்வில் அரியர் வைக்கும் மாணவர், இறுதியான 8 ஆம் பருவத் தேர்வில்தான் அதையும் சேர்த்தெழுத முடியும்.  எனவே, இவ்வாறு அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், வளாகத் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். 
உடனடித் தேர்வு: சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பொறியியல் மாணவர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு உள்ளதுபோன்று உடனடித் தேர்வை நடத்துகின்றன. 
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற உடனடித் தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவரவேண்டும். அல்லது, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அரியர் முறை ரத்தை அமல்படுத்திவிட்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டுகளில் அரியர் தேர்வு முறையை மீண்டும் அறிமுகம் செய்யவேண்டும்.
இதன் மூலம், முதல் இரண்டு ஆண்டுகள் மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த வைக்க முடியும் என்பதோடு, நான்காம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்விலும் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பளிக்க முடியும் என்றார்.
இதுகுறித்து கல்வியாளரும், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகியுமான மணிவண்ணன் கூறியது:
பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் இடம் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது, இந்த மாணவர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில்தான் கல்வித் திட்டமும், கேள்வித் தாள் தயாரிப்பையும் அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்ற வேண்டும்.  ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக 40 சதவீத மதிப்பெண் பெற்று வந்திருக்கும் மாணவர்களுக்கு ஐஐடி, ஐஐஎஸ்சி பேராசிர்களைக் கொண்டு கேள்வித் தாள்களைத் தயாரித்து வழங்குகிறார்.
இப்போது 2018 நவம்பரில் நடைபெற்ற மூன்றாம் பருவத் தேர்வுக்கும் இவ்வாறுதான் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மிகக் கடுமையாக கேட்கப்பட்டிருந்த இந்த கேள்விகளால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கல்லூரியிலும் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. முதலாமாண்டு கணித கேள்வித் தாளை, பேராசிரியர்கள் புரிந்துகொள்வதற்கே 4 மணி நேரத்துக்கு மேல் தேவைப்படும்.
எனவே, அண்ணா பல்கலைக்கழகம் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com