Enable Javscript for better performance
நியுசிலாந்து சென்ற 230 தமிழர்களின் கதி என்ன?: ராமதாஸ் கேள்வி- Dinamani

சுடச்சுட

  

  நியுசிலாந்து சென்ற 230 தமிழர்களின் கதி என்ன?: ராமதாஸ் கேள்வி 

  By DIN  |   Published on : 20th January 2019 02:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramadoss

   

  சென்னை: நியுசிலாந்தில் தஞ்சமடையும் நோக்கத்துடன் கேரளத்திலிருந்து படகில் சென்ற 230 தமிழர்களின் கதி என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

  இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

  கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த முன்னம்பம் துறைமுகத்திலிருந்து தேவமாதா என்ற படகு  மூலம் 230 தமிழர்கள் நியுசிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டுச் சென்ற பைகள்  உள்ளிட்ட உடமைகள் முன்னம்பம் துறைமுகத்துக்கு அருகிலும், கொடுங்கலூர் என்ற இடத்திலுள்ள கோவிலிலும் கண்டெடுக்கப்பட்டன. அவை யாருக்கு சொந்தமானவை? என்பது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் பல உண்மைகள் வெளிவந்தன. அப்படகில் நியுசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்து கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாத பிரபு என்பவரை பிடித்து விசாரித்த போது தான் பயணம் மேற்கொண்டவர்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

  படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதும், அவர்களில் பெரும்பான்மையினர் ஈழத்தமிழர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தில்லியிலும் வாழ்ந்து வந்த அவர்கள் இம்மாதத் தொடக்கத்தில் சென்னையில் கூடி, அங்கிருந்து ஜனவரி 11-ஆம் தேதி கொச்சி சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்களை  முன்னம்பம் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற பயண ஏற்பாட்டாளர்கள் 12-ஆம் தேதி படகில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் பயணத்தைத் தொடங்கி 9 நாட்கள் ஆகி விட்ட நிலையில், அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்ததாக தெரியவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.  தேவமாதா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயணித்தனர்  என்பதும், படகின் உரிமையாளர்கள் மூவரும் தலைமறைவாகிவிட்டதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

  நியுசிலாந்துக்கு படகு பயணம் மேற்கொண்டவர்களைக் கண்டுபிடித்து மீட்பது ஒருபுறமிருக்க, இனி வரும் காலங்களில் இத்தகைய ஆபத்தான பயணங்களை யாரும் மேற்கொள்ளமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத படகில், பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, உயிரைப் பணயம் வைத்து தமிழர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை அரசுகள் உணர வேண்டும். இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

  இலங்கையில் வசதியாக வாழ்ந்த தமிழர்கள் போரின் காரணமாக தங்களின் தந்தை நாடாக கருதும்   தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். ஆனால், இங்கு அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் திபெத் அகதிகள், பர்மா அகதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உரிமைகளில் ஒரு விழுக்காடு கூட ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தில் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை.

  அதேநேரத்தில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறும் தமிழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட தண்டனைக் காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு கண்ணியமான வாழ்க்கை வாழ வகை செய்யப்படுகிறது. நியுசிலாந்து நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அந்த நாட்டுக்குள் 1000 அகதிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1500 ஆக உயர்த்தப்படவுள்ளது. அதனால் தான் கண்ணியத்தை இழந்து வாழ்வதை விட, கடலில் இறந்தாலும் பரவாயில்லை என துணிந்து தமிழர்கள் இவ்வாறு செல்கின்றனர்.

  ஆஸ்திரேலியக் கண்டத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாவது இது முதல்முறையல்ல. கடந்த சில ஆண்டுகளில் இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இத்தகைய பயணங்களை மேற்கொண்ட 2500-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் விபத்தில் சிக்கியும், கடல் சீற்றம் காரணமாகவும் உயிரிழந்தனர். ஆனால், இத்தகைய உயிரிழப்புகள் எங்கும் பதிவு செய்யப்படுவதில்லை.

  தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாவும், கவுரவமாகவும் வாழ்வதற்கு வகை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்காது. எனவே, நியுசிலாந்து நாட்டுக்கு படகுப் பயணம் மேற்கொண்ட ஈழத்தமிழர்களை கண்டுபிடித்து மீட்பதுடன்,  அனைவரையும் அவர்கள் விரும்பும் இடத்திற்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கவோ, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பில் நிம்மதியாக வாழவோ இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வகை செய்ய வேண்டும். அத்துடன் இனி இத்தகைய ஆபத்தான பயணங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் உள்ள  ஈழத்தமிழர்கள் அனைவரும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் வாழ அரசு வகை செய்ய வேண்டும்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai