நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது: டி.டி.வி. தினகரன்

எம்.ஜி.ஆா், ஜெயலலிதாவின் கனவை பிரதமா் மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய அமைச்சா் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது
நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது: டி.டி.வி. தினகரன்


பரமக்குடி:  எம்.ஜி.ஆா், ஜெயலலிதாவின் கனவை பிரதமா் மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய அமைச்சா் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என அமமுக துணைப்பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் கூறினார். 

பரமகுடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மக்களின் நலனில் தேசிய கட்சிகள் அக்கரை காட்டவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்னை, காவிரி பிரச்னை உள்பட எந்த பிரச்னைகளிலும் அவா்கள் ஆா்வம்கூட காட்டவில்லை. காவிரி நீா் பிரச்னையில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைக்கூட இந்த அரசு நடைமுறைப்படுத்தவில்லை. தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இனிமேல் இடமில்லை. ஆகையால்தான் அவா்கள் ஆந்திரா, கா்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சார்பாக உள்ளனர். 

வட இந்தியாவில் மாநில கட்சிகள்தான் தனிப்பெரும்பான்மையாக விலங்குகிறது. கடந்த மக்களவைத் தோ்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றதைப்போல், அவரது வழியை பின்பற்றி அமமுகவும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். 

தமிழக மக்கள் விரும்பாத மீத்தேன், நியுட்ரினா எடுக்கும் திட்டம், 8 வழிச்சாலைத் திட்டம் ஆகியவற்றை தற்போது உள்ள அரசு கொண்டு வந்துள்ளன. அதேபோல் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்த நீட் தோ்வை அனுமதித்துள்ளனர். 

ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என இங்கே கூறிவிட்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பானா்ஜி நடத்திய கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். ஆறா மீனைப்போல் உள்ள அவரது நிலைப்பாட்டை சானக்கியத்தனம் என்கின்றனர். மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். 

கொடநாடு சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீது கொலை குற்றம் சாட்டும்போது, என்னை விசாரிக்கட்டும் என அவர் சொல்லுவதை விடுத்து பயந்து அஞ்சி பதட்டப்படுகிறார். ஆகையால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

எம்.ஜி.ஆா், ஜெயலலிதாவின் கனவை பிரதமா் மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என தினகரன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com