ஆம், சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் கிடைத்தது உண்மையே: திடுக்கிடும் அறிக்கையின் முழு விவரம்

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் கிடைத்தது உண்மையே: திடுக்கிடும் அறிக்கையின் முழு விவரம்


சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் அவர்களுக்கு சிறையில் விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக அப்போதைய டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். ஆனால் அதை சிறைத்துறை உயரதிகாரிகள் தீர்க்கமாக மறுத்தனர்.

எனவே இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தருவதற்காக ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவானது சிறையில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை கடந்த நவம்பரில் கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு மாநில அரசு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. இருந்தாலும் அறிக்கை விவரங்கள் அப்போது வெளியிடப்படவில்லை. 

தற்போது அறிக்கை விவரங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சசிகலாவுக்கும், இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த 5 அறைகளும் ஒருவரேப் பயன்படுத்தும் வகையில் இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.  அதன் கதவுகள் திறக்கப்பட்டு வேறு யாரும் அதில் அடைத்து வைக்கப்படாமல் இருவர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அறைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது உண்மை என்கிறது அந்த அறிக்கை.

அங்கிருந்த அலமாரிகள் சோதனையின் போது காலியாகவே இருந்தன. ஆனால் அவற்றில் ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டு எடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

சசிகலாவுக்கு சிறையில் தனியாக சமைத்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆடை அணிவதிலும், பார்வையாளர் சந்திப்பு நேரங்களிலும் கடுமையான விதி மீறல்கள் நடந்துள்ளது.

மேலும், ரூபாவால் தாக்கல் செய்யப்பட்ட 3 விடியோ காட்சிகளில், சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் சிறை வளாகம் முழுவதும் சென்று வந்த காட்சிகளும், வெளியே கடைக்குச் சென்று கையில் பையுடன் வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி, அவரை சந்திக்க வரும் நபருடன் அதிகபட்சமாக 45 நிமிடம்தான் பேச முடியும். ஆனால் சிசிடிவி காட்சியில் பதிவான தகவலின் அடிப்படையில், ஒருநபரை அதாவது அவரது வழக்குரைஞர் என்று பதிவேட்டில் பதிவிடப்பட்டிருந்தது. அவரை வெறும் 45 நிமிடம் சந்தித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபரை 4 மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்துப் பேசியிருப்பது விடியோவில் பதிவாகியுள்ளது. எனவே விடியோ பதிவுக்கு முற்றிலும் முரணாக சிறைத் துறை பதிவுகள் உள்ளது மோசடி நடந்திருப்பதை உறுதி செய்துள்ளது.

அதோடு, 11.7.2017ம் தேதிப்படி இளவரசியை ஒரே நாளில் 7 பேர் சந்தித்துப் பேசியுள்ளனர். பல மணி நேரம் இந்த சந்திப்பு நடந்திருப்பதை சிசிடிவி காட்டுகிறது. ஆனால் சிறைத் துறை பதிவேட்டில் மதியம் 2 மணி முதல் 2.45 மணி வரை மட்டுமே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை மட்டுமே அல்ல. 2017 ஜூலை 7ம் தேதி இளவரசி 7 மணி நேரத்துக்கும் மேல் ஒருவரை சந்தித்துப் பேசியுள்ளார். இது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ஆனால் பதிவேட்டில் குறிப்பிடப்படவேயில்லை. இதேப்போல ஜூன் மாதமும் நடந்துள்ளது.

சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட போது அதாவது 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் சிறைச்சாலைக்குள் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை அனைத்தும் ஏ பிரிவினருக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள். இதனை நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே வழங்க முடியும். ஆனால், சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு ஏ பிரிவு சலுகை வழங்க நீதிமன்றம் அனுமதி மறுத்தப்பிறகும் அந்த வசதிகள் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

அதில், மாலை நேரத்தில் மாலைநேர சிற்றுண்டி, தேநீர், பிளாஸ்டிக் சேர்களை பயன்படுத்த அனமதி, 8 கூடுதல் பெண் வார்டன்கள், பொழுதுபோக்கு அம்சம், பழங்கள், பிஸ்கெட்டுகள் சாப்பிட அனுமதி, பிரத்யேக ஆடைகளைப் பயன்படுத்த அனுமதி என பட்டியல் சற்று நீளமாகவே உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com