ஆள்கள் பற்றாக்குறை: இலவச சீருடைகள் தயாரிப்பில் தாமதம்

இலவச சீருடைகளுக்காக ஈரோடு மாவட்டத்துக்கு 1.92 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், துணிகளைத் தரம் பிரிப்பதில் ஆள்கள் பற்றாக்குறையால்  நடப்பாண்டு
ஆள்கள் பற்றாக்குறை: இலவச சீருடைகள் தயாரிப்பில் தாமதம்

ஈரோடு : இலவச சீருடைகளுக்காக ஈரோடு மாவட்டத்துக்கு 1.92 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்ய பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், துணிகளைத் தரம் பிரிப்பதில் ஆள்கள் பற்றாக்குறையால்  நடப்பாண்டு மாணவ, மாணவிகளுக்கு உரிய காலத்தில் சீருடைகள் கிடைப்பது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசின் சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்தப் பள்ளிகள் விருப்பத்துக்கேற்ப சீருடைகள் தேர்வு செய்து வழங்கி வந்தன. 
இந்நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  ஒரே மாதிரியான சீருடையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவை முழுமையாக வழங்கப்படவில்லை.  மாநில அளவில் இலவச சீருடைகள் உற்பத்தி செய்ய ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக  பணி ஆணை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கைத்தறி, துணிநூல் துறை சார்பில் இதற்கான  பணி ஆணைகள்  பெறப்பட்டுள்ளன.
 அதில், 1.20 கோடி மீட்டர் சட்டை ரகங்களும், 36.25 லட்சம் மீட்டர் கேஸ்மெட் ரகங்களும், 36.15 லட்சம் மீட்டர் டிரில் ரகங்கள் உள்பட மொத்தம் 1 கோடியே 92 லட்சத்து 40 ஆயிரம் மீட்டர் துணி வகைகள் உற்பத்தி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 42 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகத் துணி தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  
ஈரோடு, கோவை, திருப்பூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட இலவச சீருடைகளுக்கான கிரே ரகத் துணிகள் அனைத்தும்,  வில்லரசம்பட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இங்கு துணிகள் தரம் பார்க்கப்பட்டு ஈரோட்டில் உள்ள துணி நூல் பதனிடும் ஆலைகளுக்கும், சித்தோடு கங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் சாய ஆலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. துணிகள் சாயமிட்டதும், மீண்டும்  கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு தரம் பார்க்கப்பட்டு இலவச சீருடைகள் தைப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட சமூக நலஅலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது கைத்தறி, துணி நூல் துறை சார்பில் கிரே ரகத் துணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட அளவுக்கு உற்பத்தி செய்து வில்லரசம்பட்டியில் உள்ள தரம் பார்க்கும் மையத்துக்கு அனுப்பியுள்ளனர். அங்கு துணிகள் தரம் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
ஆனால், கோ-ஆப்டெக்ஸ் கிடங்குகளில்  உள்ள துணிகளின் தரத்தைப் பரிசோதிக்க,  ஆள்கள் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளதால் துணிகளை சாயமிடுவதற்காக அனுப்பும் பணியில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. 
இதன் காரணமாக, இலவச சீருடைகள் தைக்க பல்வேறு மாவட்டங்களுக்கு துணி அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தரம் பார்ப்பதற்காக பல மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு துணிகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உரிய  காலத்தில் சீருடைகள்  கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது:  அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இலவச சீருடைகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் துணிகள் உற்பத்தி செய்வதற்காக கைத்தறி துணி நூல் துறைக்கு ஆர்டர் வழங்கப்பட்டது. இதற்காக கிரே ரகத் துணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசைத்தறிகள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
 ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்தும் இந்த கிரே துணிகள்  உற்பத்தி செய்யப்பட்டு, வில்லரசம்பட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கிடங்குக்கு  கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கிருந்து துணிகள் தரம் பார்க்கப்பட்டு சாயமிட அனுப்பி வைக்கப்படுகின்றன. துணிகள் தரம் பார்க்க  நாளொன்றுக்கு ரூ. 265 கூலி  வழங்கப்படுகிறது. இந்த மையத்தில் 60 பேர் பணியாற்றி வரும் நிலையில், கூடுதல் எண்ணிக்கை காரணமாகத் துணிகள் தரம் பார்ப்பதில் காலதாமதம்  நீடிக்கிறது. இதனால் துணிகளை சாயமிடுவதற்கும், மீண்டும் சாயமிடப்பட்ட துணிகளைத் தரம் பார்த்து  பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதிலும்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இலவச சீருடைகள் தயாரிப்பு பணி 30 சதவீத அளவுக்கு மட்டுமே நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை முடித்து அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவச சீருடைகள் வழங்க செப்டம்பர் மாதம் ஆகிவிடும். இதற்கான பணிகளை விரைந்து முடித்தால்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் உரிய காலத்துக்குள் கொடுக்க முடியும். தரம் பார்க்கும் மையத்தில் கூடுதலாகப் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com