உலக சாதனையானது விராலிமலை ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா,  இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து 9.30 மணி நேரம் நடைபெற்ற பிரம்மாண்ட உலக  சாதனை போட்டியாக அமைந்தது.
பாரம்பரிய காளை வகைகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
பாரம்பரிய காளை வகைகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா,  இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து 9.30 மணி நேரம் நடைபெற்ற பிரம்மாண்ட உலக  சாதனை போட்டியாக அமைந்தது. இதில் பார்வையாளர் இருவர் காளை முட்டி இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.  
விராலிமலையில் அம்மன் குளத்தில் ஸ்ரீ பட்டமரத்தான் கருப்புசாமி கோயில் விழாக் குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், சுகாதாரத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் முன்னின்று விழாவை நடத்தினார்.
காலை 7.45-க்கு கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 8.15-க்கு முதல்வர் எடப்பாடி கே . பழனிசாமி மேடைக்கு வந்து பச்சைக்கொடி காட்டி ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி  பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் காளைகள் வந்திருந்தன. 1353 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அம்மன் குளத்தில் சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு காளைகள் வரிசையாக நிறுத்தி வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டன. 
மாடுபிடி வீரர்கள் முன்பே ஒவ்வொரு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றி களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு அவ்வப்போதே பரிசுகள் அறிவிக்கப்பட்டன. மாலை 4.30 மணியளவில் தொடர்ந்து காளைகளின் வரிசை  நீண்டு கொண்டே இருந்தது. ஏற்கெனவே நீதிமன்ற வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நேரத்தில் ஜல்லிக்கட்டை நிறைவு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இதுகுறித்து மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வரதராஜு, சரக காவல் துணைத் தலைவர் லலிதா லட்சுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் உள்ளிட்டோர் விழாக்குழுவினருக்கு சில அறிவுரைகளை வழங்கினர்.
இதனால் நீண்ட வரிசை நிறுத்தப்பட்டு விழாக்குழுவினருடன் காவல் ஆய்வாளர்களும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வரிசையில் நின்ற காளைகளின் முன்பதிவுச் சீட்டைப் பெற்று ஆறுதல் பரிசுக்கான ரசீதுகளை வழங்கிச் சமாதானப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் சரியாக மாலை 5.20 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  முடிவில் மொத்தம் 9.30 மணி நேரம் நடைபெற்ற  ஜல்லிக்கட்டில் 1353 காளைகள் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டது.
இருவர் சாவு : விழாவில், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு தடுப்புகளைத் தாண்டி அப்பகுதியில் ஜல்லிக்கட்டுவைப் பார்க்க வந்திருந்தவர்களை காளைகள் முட்டியதில்  இலுப்பூர் அருகே சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு (25) என்பவரும், திருச்சி ஜீயபுரம்  அல்லூரைச் சேர்ந்த எல். சதீஷ்குமார் (35) என்பவரும்  காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். 47 பேர் காளை முட்டி காயமடைந்தனர். இவர்களில் 8 பேர் திருச்சி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க முயலும் காளையர்.

உலக சாதனையாக அறிவிப்பு!

விராலிமலை ஜல்லிக்கட்டு விழாவை உலக சாதனைப் பட்டியலில் பதிவு செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 
இதற்காக லண்டனில் இருந்து மார்க், மெலினி ஆகியோர் வந்திருந்தனர். காலை முதல் மாலை வரை மேடையில் இருந்து முழுமையாக விழாவைப் பார்வையிட்ட அவர்கள், விழாவின் முடிவில் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் காளைகளை விழாவில் பங்கேற்கச் செய்த உலக சாதனைக்கான சான்றிதழை மாலை வழங்கினர்.

 சிறந்த வீரர், சிறந்த காளைக்குப் பரிசு

ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தத்துக்கு சிறந்த மாடு பிடி வீரருக்கான பரிசாகவும், ராப்பூசலைச் சேர்ந்த பி. முருகானந்தம் என்பவரின் காளை சிறந்த காளைக்கான பரிசாகவும் தலா ஒரு கார்கள் வழங்கப்பட்டன.
இரண்டாவது பரிசாக மாடுபிடி வீரர் காட்டூர் கார்த்திக், முன்றாம் பரிசாக செங்குறிச்சி ஆனந்த் ஆகியோருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com