பாதுகாக்கப்படுமா வீராணம் ஏரி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி உள்ளிட்ட நீர்வழி, நீர் நிலை ஆதாரங்களின் சிதிலமடைந்த கட்டுமானங்களை சீரமைக்க தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாக்கப்படுமா வீராணம் ஏரி!


சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி உள்ளிட்ட நீர்வழி, நீர் நிலை ஆதாரங்களின் சிதிலமடைந்த கட்டுமானங்களை சீரமைக்க தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சோழ வம்சத்து இளவரசர் இராஜாதித்தன் ஆணைப்படி, 1011- 1037-ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிக்கு வீரநாராயணன் ஏரி எனப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அதுவே காலப்போக்கில் வீராணம் ஏரி என்று மருவியது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான, வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட வீராணம் ஏரியின் கிழக்குப் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஆகும். ஏரியின் மொத்தச் சுற்றளவு 48 கி.மீ. இந்த ஏரியின் அதிகபட்ச அகலம் 5.6 கி.மீ. ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்கள் ஆகும்.
இந்த ஏரியின் உச்ச நீர்மட்டம் 47.50 அடி.  ஏரியின் கடல்மட்ட அளவு 31.90 அடி போக மீதமுள்ள 15.60 அடியே அதிகபட்ச நீர்மட்ட அளவாக உள்ளது. ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1465 மில்லியின் கன அடியாகும் (1.465 டி.எம்.சி.).
ஏரியின் கிழக்கு கரையில் 28 மதகுகளும், மேற்கு கரையில் 6 மதகுகளும் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி ஆகிய வட்டங்களில் 44,990 ஏக்கர் விளை நிலங்களின் பாசனத்துக்கான நீராதாரமாக வீராணம் ஏரி விளங்குகிறது.
2004-ஆம் ஆண்டுமுதல் சென்னை மாநகர குடிநீர்த் தேவையில் நான்கில் ஒரு பங்கை நிறைவு செய்யும் பணியை இந்த ஏரி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி வீராணம் ஏரியின் புதிய வாழைக்கொல்லை மதகின் பக்கவாட்டுப்  பகுதியில் சிறிய அளவில் நீர்க்கசிவு ஏற்பட்டு நீர்போக்கியின் மூலம் வெளியேறி உடைப்பு ஏற்படும் தருவாயில் கண்டுபிடிக்கப்பட்டு மண்கொட்டி, மணல் மூட்டைகளை அடுக்கி அடைக்கப்பட்டது. மிகப் பெரிய அளவில் ஏற்பட இருந்த அசம்பாவிதம் அந்தப் பகுதி விவசாயிகளின் ஒத்துழைப்புடன் உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது.
வீராணம் ஏரியின் கிழக்குக் கரை சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவிலை இணைக்கும் பிரதான சாலையாகும். 2004-ஆம் ஆண்டு சென்னை குடிநீர்த் தேவைக்காக உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சாலை அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வீராணம் ஏரியின் தலை மதகுகள், ஷட்டர்கள், திருகுகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், சிதிலமடைந்த நீர்வழி போக்கிகள் சீரமைக்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக வாகனப் போக்குவரத்தால் அனைத்து மதகுகளும் பலவீனமாக இருந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெய்யலூர், பூதங்குடி, கூளாப்பாடி, லால்பேட்டை ஆகிய பகுதி மதகுகள் உடைந்து நீர்வழி போக்கிகளில் அடைப்பு ஏற்பட்டது. இவற்றை சீரமைக்க  தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. மற்ற மதகுகள் அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட நீர்வழி போக்கிகள்.

சென்னை, கும்பகோணம், தஞ்சை ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை விளங்குகிறது. சாலையின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணைப் பாலம் 186 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. 2009-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28-ஆம் தேதி வடக்கு கொள்ளிடம் பாலத்தின் 13-ஆவது மதகில் விரிசல் ஏற்பட்டு போக்கு வரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
அப்போதைய தமிழக அரசின் பொதுப் பணித் துறை ஆலோசகர் பேராசிரியர் அ.மோகனகிருஷ்ணன் தலைமையில், பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 9 பொறியாளர்களைக் கொண்ட குழு கீழணைப் பாலத்தை ஆய்வு செய்து வடக்கு கொள்ளிடம் பாலத்தில் 11, 12, 13 ஆகிய மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைப் பார்வையிட்டு இனி இந்தப் பாலத்தை போக்குவரத்துக்குப் பயன்படுத்தாமல் புதிய பாலம் கட்டப்பட வேண்டும் என அறிக்கை வழங்கினர். அவரது கருத்தை ஏற்று தற்காலிகமாக பாலம், ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டு, ஜனவரி  6 -ஆம் தேதி வாகனப் போக்குவரத்துக்காக பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. 
2013-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30-ஆம் தேதி தெற்கு கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் 16, 17 ஆகிய மதகுகளுக்கு இடையேயும், 27-ஆவது மதகிலும் மீண்டும் விரிசல் ஏற்பட்டு பாலம் உள்வாங்கியது. இதனால், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியது:
கீழணைப் பால மதகுகளில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட காலங்களில் சேத்தியாதோப்பு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், தா.பழூர், மதனத்தூர், நீலத்தநல்லூர், கும்பகோணம் ஆகிய இரண்டு சாலைகளை வாகன ஓட்டிகள் தங்களது வசதிக்கேற்ப பயன்படுத்தினர்.
2015-ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் முட்டம் முடிகண்டநல்லூர் பாலம் ரூ. 48 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. அணைக்கரையைக் கடந்து செல்ல வேண்டிய வாகனங்கள், போக்குவரத்து தடை செய்ததில் இருந்து பயன்படுத்தப்பட்ட மதனத்தூர், நீலாத்தநல்லூர் பாலம் வழிச் சாலையும், சிதம்பரம் , சீர்காழி கொள்ளிடம் பாலம் வழிச் சாலையும் தூரம் அதிகமாக இருந்தது. இதனால் பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைக்க சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், முட்டம், முடிகண்ட நல்லூர், மணல்மேடு வழியாக வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பந்தநல்லூர் மற்றும் திருப்பனந்தாள் வழியாக குறைந்த தொலைவில் சென்று வந்தனர்.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கும்பகோணம், சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, நெய்வேலி, ஆகிய நகரங்களுக்கும், அரியலூர் சிமென்ட் ஆலைகளுக்கும், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களுக்கும் சென்று வரும் கனரக வாகனங்கள் மற்றும் புதிய சாலைப் பணிகளுக்கு கருங்கல் ஜல்லி, கிராவல், செம்மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் சேத்தியாத்தோப்பு காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரி சாலையைப் பயன்படுத்தி சென்று வந்ததால் ஏரிக்கரையில் உள்ள நீர்வழி போக்கிகள் பலம் குறைந்துள்ளன.
மேலும் பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர நகரங்களில் கடல் அலையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க தேவைப்படும் கருங்கல் பாறைகள் அனைத்தும் கனரக வாகனங்களின் மூலம் வீராணம் ஏரிச் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டன. இந்தச் சாலை வழியாக இயக்கப்பட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் 60 முதல் 70 டன் எடையில் கருங்கல் ஜல்லி, பாறைகள், கிராவல் செம்மண், சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்றதால் வீராணம் ஏரிச் சாலையும், சாலையின் குறுக்கே அமைந்துள்ள நீர்வழி போக்கிகளும் சேதமடைந்துள்ளன. 
180 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள நீர்நிலை கட்டுமானங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டியது அவசர, அவசியமாகும். இதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.  கீழணை பாலத்தில் பேருந்து,  வாகனங்களை இயக்க பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டதுபோல அனைத்துக் கட்டுமானங்களையும் ஆய்வு மேற்கொண்டு பலவீனமானவற்றை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து, கோடை காலத்தில் அந்தப் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி நீர்வழிபோக்கிகள், நீர்த் தேக்க சாலைகளில் குறிப்பாக வீராணம் ஏரிக் கரை சாலையில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்காமல் வாகனங்களின் சுமையைக் குறைத்து அனுமதிக்க வேண்டும். வாகனங்களின் எடை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com