Enable Javscript for better performance
ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று முதல் தொடக்கம்: தற்செயல் விடுப்புக்கு அனுமதியில்லை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று முதல் தொடக்கம்: தலைமைச் செயலர் எச்சரிக்கை

    By DIN  |   Published On : 22nd January 2019 01:17 AM  |   Last Updated : 22nd January 2019 02:58 AM  |  அ+அ அ-  |  


    காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் எந்த ஊழியருக்கும் விடுப்புகளை அனுமதிக்கக் கூடாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 
    21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, இந்தப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக நடைபெறும் என அறிவித்துள்ளது.
    இந்த நிலையில், அரசுப் பணிகளும், பள்ளிகளும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு 
    நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதத்தை அனைத்துத் துறை 
    செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பி வைத்துள்ளார். அதன் விவரம்:-
    அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டால், அது பணிக்கு வராத நாளாகக் கருத்தில் கொள்ளப்படும். பணிக்கு வராத நாள்களில் ஊதியம் ஏதும் அளிக்கப்படாது. மேலும், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விடுமுறை எடுத்து பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வரும் வரையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் விடுமுறை 
    அளிக்கக் கூடாது. மருத்துவ விடுப்பு கோரினால் அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே அளிக்க வேண்டும். மருத்துவ விடுப்பு கோரும் அரசு ஊழியர்களின் விண்ணப்பங்கள், சான்றுகளை தமிழக மருத்துவ வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே மருத்துவ விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
    இந்தச் சான்றுகள் உரிய முறையில் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
    பணிப் பட்டியலை அனுப்ப வேண்டும்: போராட்டங்கள் முடியும் வரையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதுகுறித்த வரையறுக்கப்பட்ட பட்டியலை ஒவ்வொரு நாளும் காலை 10.15 மணிக்குள் தலைமைச் செயலகத்தின் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை கிராம அளவில் இருந்து தொடங்கி மாவட்டங்கள் மற்றும் மாநில அளவிலான அலுவலகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    வேலைநிறுத்தத்தில் பங்கேற்பில்லை
    ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன.
    இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
    தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள்- அடிப்படைப் பணியாளர்கள் மாநில மையச் சங்கம், அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு) ஆகிய அரசின் அங்கீகாரம் பெற்ற பிரதான அரசுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை திங்கள்கிழமை சந்தித்தனர்.
    அப்போது, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ செவ்வாய்க்கிழமை (ஜன. 22) முதல் நடத்த உத்தேசித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தங்கள் சங்கங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் உறுதி அளித்தனர். அத்துடன், அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்தக் கோரிக்கைகள் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்தார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp