பரிந்துரைகளில் பாதியைக்கூட நிறைவேற்றவில்லை!: தமிழக அரசு மீது தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையம் புகார்

தாங்கள் வழங்கிய பரிந்துரைகளில் பாதியைக்கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று, தேசிய துப்புரவு தொழிலாளர் நல


தாங்கள் வழங்கிய பரிந்துரைகளில் பாதியைக்கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று, தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையம் புகார் கூறியுள்ளது. தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையத் தலைவர் மன்ஹர் வால்ஜி பஹாய் ஜாலா தலைமையிலான குழு தமிழகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின் பிரதான துறைகளான குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரியம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேசிய ஆணையத் தலைவர் தலைமையிலான குழு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தேசிய நல ஆணையத் தலைவர் மன்ஹர் வால்ஜி பஹாய் ஜாலா, உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மனி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியது:-
உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலன்கள் பேணிக் காக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தோம். அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும், நேரில் செய்யப்பட்ட ஆய்வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஆறு நகரங்களில் ஆய்வு தொடர்பான புள்ளிவிவரங்கள் ஆராயப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே அளிக்கப்படுகிறது. இது, தொழிலாளர் நலச் சட்ட விதிகளை மீறும் வகையில் உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கென நிரந்தரமான ஈட்டுறுதி காப்பீடோ, வைப்பு நிதியோ செய்யப்படவில்லை. பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் அளிக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிந்தது. மேலும், பாதாள சாக்கடைகளில் போதிய பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் இறங்கி இறந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களும் அரசிடம் இல்லை. பாதாள சாக்கடைகளுக்கு அடியில் இருக்கக் கூடிய மின்சார கேபிள்கள் குறித்த புரிதல்கள் அதிலே இறங்கக் கூடிய ஊழியர்களுக்கு இருப்பதில்லை.
பாதாள சாக்கடைகளுக்குள் மின்சார கேபிள்கள் சென்றால் அதுகுறித்த டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம். இதுபோன்ற பல்வேறு உத்தரவுகளை தேசிய துப்புரவு நல ஆணையத்தின் சார்பில் பிறப்பித்திருந்தும், அதில் 50 சதவீதத்தைக்கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, அதாவது இரண்டு மாதங்களுக்குள்ளாக அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை தேசிய ஆணையம் மேற்கொள்ளும் என்றார்.
இதைத் தொடர்ந்து, தேசிய துப்புரவு நல ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமையன்று நேரில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com