மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓராண்டில் 5 லட்சம் பேர் பயன்

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் 5, 42, 878 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது


முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் 5, 42, 878 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது சிகிச்சை செலவுக்காக அந்த காலகட்டத்தில் மாநில அரசு ரூ. 909 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அதிகபட்சமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவச் செலவினங்களுக்கு மட்டும் ரூ.150 கோடி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் மருத்துவ சிகிச்சைகளுக்காக சுமார் ரூ.5,500 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு நடுவே, மத்திய அரசு முன்னெடுத்த ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்துடன் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டது.
அதற்கேற்ப மாநிலத்தில் காப்பீட்டு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மாநில அரசு மருத்துவக் காப்பீட்டுக்கு வழங்கிய தொகை மற்றும் அதனால் பயனடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தபோது, அதில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஆண்களும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும் பயன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
மாவட்ட வாரியாக கணக்கிட்டால் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், மதுரை, சேலம் மாவட்டங்கள் உள்ளன.
மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்தான் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். அதாவது அங்கு கடந்த ஆண்டில் சுமார் 30,370 பேருக்கு ரூ.52 கோடி செலவிலான சிகிச்சைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, மதுரை ராஜாஜி பொது மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.


தனியார் மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால் அடையாறு புற்றுநோய் மையத்தில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 8,551 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை, மதுரை வேலம்மாள் மருத்துவமனைகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் உரிய மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது. அதன்படி தொடங்கப்பட்ட முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். பிற மாநிலங்களைக் காட்டிலும் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தபூர்வமாகவும் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com